தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்கள்: தடை விதிக்கவுள்ள பாலி

1 mins read
227c7bf1-dfaf-4e70-af4d-0ef073fc534a
பாலியில் கடந்த ஆண்டு 1.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின. - படம்: ஏஎஃப்பி

இந்தோனீசியாவின் பாலி அரசாங்கம் சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்களின் உற்பத்தியை 2026ஆம் ஆண்டிலிருந்து நிறுத்த திட்டமிட்டுள்ளது.

“அதை முழுமையாக ஆதரிக்கிறேன். சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் பற்றி நன்கு ஆராய்ந்த பிறகு அதன் உற்பத்தியை இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தடைசெய்யவேண்டுமா என்பது தீர்மானிக்கப்படும்,” என்றார் பாலியின் துணை ஆளுநர் நியோமன் கிரி பிரஸ்தா.

பாலி அரசாங்கம் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குத் தடை விதிப்பதில் இன்னும் கவனம் செலுத்துவருவதாகச் சொன்ன அவர், மற்றொரு பிளாஸ்டிக் பொருள் மீதான தடை 2026ஆம் ஆண்டுக்குள் நடப்புக்கு வர சாத்தியம் இருப்பதாகக் கூறினார்.

“இதுகுறித்து கலந்துரையாடிவிட்டோம். முடிவு பிறகு அறிவிக்கப்படும்,” என்றார் திரு கிரி.

கடந்த ஆண்டு மட்டும் பாலியில் 1.2 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியானதாகத் தேசியக் கழிவு நிர்வாகத் தகவல் கட்டமைப்பு சொன்னது.

இதற்கிடையே, பாலியில் உள்ள இரண்டு குடிநீர் போத்தல் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கும் குறைவான கொள்ளளவைக் கொண்ட பிளாஸ்டிக் போத்தல்களின் உற்பத்தி, விநியோகம் ஆகியவைமீதி விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துள்ளன.

குறிப்புச் சொற்கள்