அரிசியைவிட சிறிய அளவிலான ‘பேஸ்மேக்கர்’ கண்டுபிடிப்பு

1 mins read
21f7a204-6417-4412-ba5b-7ec0dbc6d6c2
தற்காலிகமாக இதயத் துடிப்பைச் சீராக்கும் அரிசியைவிட மிகச் சிறிய அளவுடைய ‘பேஸ்மேக்கர்’ கருவியைக் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: உலகின் மிகச் சிறிய ‘பேஸ்மேக்கர்’ எனப்படும் இதயமுடுக்கியை (படம்) உருவாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் புதன்கிழமையன்று (ஏப்ரல் 2) தெரிவித்தனர்.

அரிசியைவிட மிகச் சிறிய அளவுடைய அக்கருவியை ஒளியைக் கொண்டு செலுத்தவும் இயக்கவும் முடியும் எனக் கூறப்படுகிறது.

தற்காலிகமாக இதயத் துடிப்பைச் சீராக்கும் அக்கருவி தன் பணியை முடித்தவுடன் கரைந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ உலகின் மிகப் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படும் இக்கண்டுபிடிப்பு, மனிதர்களிடம் சோதிக்கப்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் எனச் சொல்லப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்களுக்கு நிரந்தர இதயமுடுக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்துடிப்புகளால் இதயத்தைத் தூண்டி, அதை இயல்பாகத் துடிக்க வைக்க அவை பயன்படுகின்றன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயரும் இதயத் துடிப்பைத் தற்காலிகமாகக் கட்டுபடுத்தவும் பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறந்த ஒரு விழுக்காட்டுப் பிள்ளைகளுக்கு உதவவும் அப்புதிய கருவி பயன்படும் என அமெரிக்கா தலைமையிலான ஆய்வாளர்கள் குழு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்