தம்மை ‘உலகின் ஆகச் சிறந்த நொறுக்குத் தீனி உளவாளி’ என்று அழைத்துக்கொள்ளும் அமெரிக்கரான எட் நாதன்சன் என்பவர் இந்திய உணவு வகைகளால் வெகுவாக கவரப்பட்டுள்ளார்.
அவர் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் இந்திய உணவு வகைகளின் தனிப்பட்ட சுவை அவரை வேறு கலாசாரங்கள், நாடுகளைச் சேர்ந்த இதர உணவு வகைகளைச் சுவைப்பதில் இருந்து ‘தள்ளிவைத்து’ விட்டதாக குறைபட்டுக்கொண்டார்.
உலகின் மற்ற உணவு வகைகள் மிக எளிதாக அமைந்துள்ளதாகவும் இந்திய உணவுகள் அவருக்கு ஏற்படுத்தும் இன்ப உணர்வுகளை அவை அவருக்கு வழங்க மறுப்பதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர் இந்திய உணவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அன்றுமுதல் அவற்றின் நறுமணமும் நற்சுவையும் அவரை ஈர்த்துவிட்டன.
இந்திய உணவுக்குப் பல சுவைகள் அமைந்துள்ளதாகவும் அதன் வடிவங்கள் மாறுபட்டு விளங்குவதாகவும் மற்ற உணவுகளுக்கு அத்தன்மை இல்லை எனவும் அவர் கூறினார். அதோடு மற்ற உணவுகளை அவர் முன்புபோல விரும்பி உண்ண முடிவதில்லை என்று வேடிக்கையாகக் கூறினார். அதுவே அவக்கு ஒருவித ‘பிரச்சினை’ ஆகிவிட்டது என்றார் எட் நாதன்சன்.
பானிபூரி, கோபி மஞ்சூரியன் போன்ற சாலையோர உணவுப் பதார்த்தங்களை அவர் குறிப்பிட்டு, தீவிர அசைவரான அவரை தற்போது இந்திய சைவ உணவுகள் ஆக்கிரமித்துவிட்டதாகத் தெரிவித்தார்.
“இறைவனே எனது நாவினைத் திறந்து இந்திய உணவின் இன்பத்தை அளித்ததைப் போல் உணர்கிறேன்” என்று அவர் பெருமிதம் கொண்டார்.


