லண்டன்: இங்கிலாந்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) ஏற்பட்ட கடும் பனியால் ஆகாயப் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்டனிலும் லிவர்பூலிலும் உள்ள விமான நிலையங்களில் ஓடுபாதைகள் மூடப்பட்டன.
வட இங்கிலாந்தில் உள்ள பிங்லி நகரில் இரவு முழுவதும் 12 சென்டிமீட்டர் உயரத்துக்குப் பனி காணப்பட்டதாக வானிலை அலுவலகம் தெரிவித்தது.
வேல்சின் பெரும்பாலான பகுதிகள், மத்திய இங்கிலாந்து, வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் ‘எம்பர்’ நிற வானிலை எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டது. ஆகக் கடுமையான நிலைக்கு அடுத்தபடியாக அது உள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர், லிவர்பூல் ஜான் லெனன் விமான நிலையங்கள் அவற்றின் ஓடுபாதைகளை மூடின.
இதற்கிடையே, மத்திய, தென்மேற்கு இங்கிலாந்திலும் வேல்சின் தென்பகுதியிலும் ஏற்பட்ட மின்சாரத் தடையைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய பயனீட்டு நிறுவனம் தெரிவித்தது.