பிரசல்ஸ்: சமூக ஊடகங்களைச் சிறார் பயன்படுத்தாத வகையில் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகச் செயலாற்றுகிறது.
நீண்டநாள்களாக எதிர்பார்க்கப்படும் அந்தத் தடை குறித்த நிபுணர்களின் ஆய்வறிக்கை அடுத்த வாரம் (ஜூலை 13) அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அந்த நிபுணர் குழுவை நியமித்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலக நாடுகளுக்கு இடையே ஆஸ்திரேலியா முதன்முதலாக 16 வயதுக்கு உட்பட்டோருக்கு அத்தடையை நடைமுறைப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, டென்மார்க், கிரீஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் அதே சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும் பின்பற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
ஐரோப்பாவில் கோடைக்காலத்துக்குள் (ஆகஸ்ட், செம்டம்பர்) அச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடைச் சட்டத்தின் பல வரைவுகளை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது.அவற்றில் முழுமையான தடை அல்லது சில சேவைகளையும் குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டும் தடை செய்வது போன்ற தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, இணையத்திலும் சிறாருக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகிறது. சிறாரை நேரடியாக பாதிக்கும் வணிகங்களும் அவற்றின் வடிவமைப்பும் அவற்றுள் அடங்கும்.

