சமூக ஊடகத் தடை நடப்புக்கு வந்துள்ள நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட செயலிகளுக்கு இந்தோனீசிய அரசு வலியுறுத்தல்

சமூக ஊடகத் தடை நடப்புக்கு வந்துள்ள நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட செயலிகளுக்கு இந்தோனீசிய அரசு வலியுறுத்தல்

2 mins read
007ae91a-570e-4284-a2cc-73cf01919d81
சிறாரின் நல்வாழ்வுக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடியவை என வகைப்படுத்தப்பட்ட மின்னிலக்கத் தளங்களை அவர்கள் அணுகுவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மார்ச் 28ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்துள்ளன. இந்நிலையில், இரண்டு மின்னிலக்கத் தளங்கள் அரசாங்கத்தின் இந்த விதிமுறைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தக் கொள்கையைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க அமைச்சு எச்சரித்துள்ளது.

சிறாரின் நல்வாழ்வுக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடியவை என வகைப்படுத்தப்பட்ட மின்னிலக்கத் தளங்களை அவர்கள் அணுகுவதைத் தடை செய்வதன் மூலம், ஆபாசம், சுரண்டல் மற்றும் பிற பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே இந்தக் கொள்கைகளின் நோக்கமாகும். முதற்கட்டமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், திரெட்ஸ், டிக்டாக், எக்ஸ் தளம், ரோப்லாக்ஸ் மற்றும் பிகோ லைவ் ஆகிய எட்டு தளங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தளங்கள் 16 வயதுக்குப்பட்ட பயனர்களுக்குத் தங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைச் சுயமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

இருப்பினும் தொடர்பு, மின்னிலக்கத் துறை அமைச்சர் மெயுத்யா ஹஃபீத் மார்ச் 27ஆம் தேதி மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, பிகோ லைவ் மற்றும் எக்ஸ் ஆகிய தளங்கள் மட்டுமே குறைந்தபட்ச பயனர் வயதை முறையே 16 மற்றும் 18 என நிர்ணயித்து விதிமுறைக்கு முழுமையாக உட்பட்டு நடந்துகொள்கின்றன.

“இந்த இணக்கப் பட்டியல் மாற்றத்திற்குரியது. மார்ச் 28ஆம் தேதி வரை தொடர்ந்து கண்காணிப்போம்,” என்று மார்ச் 27ஆம் தேதியன்று செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் கூறினார். மேலும், தற்போதைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கிய தளங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார் அவர்.

இதற்கிடையே, எக்ஸ் தளம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தோனீசியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அங்கு கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்