சிட்னி: உலகளவில் முதன்முறையாக பதின்ம வயதினர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடை ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டது.
அந்த உத்தரவுக்குத் தாங்கள் இணங்கிச் செயல்படப்போவதாக கூகலின் யூடியூப் தளம் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியப் பயனர்களுக்கும் பதிவுகளை உருவாக்குபவர்களுக்கும் (content creators) புதன்கிழமை (டிசம்பர் 3) தெரியப்படுத்தியது. அதன்படி டிசம்பர் 10ஆம் தேதி முதல் நாள்களில் அந்நாட்டில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், அவர்களின் யூடியூப் கணக்குகளிலிருந்து வெளியேற்றப்படுவர்.
இந்தத் தடை காரணமாக கூகலுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்தது. இப்போது அது முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது.
யூடியூபுக்கு முதலில் சமூக ஊடகத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கல்வி தொடர்பான காரணங்களுக்கு யூடியூப் தளம் பயன்படுத்தப்பட்டது அதற்குக் காரணம்.
இப்போது யூடியூபும் தடையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதற்கு எவ்வகை நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அறிய சட்ட ரீதியாக ஆலோசித்து வருவதாகக் கூகல் தெரிவித்தது.
“இனி யூடியூப் தளத்துக்குள் ‘சைன் இன்’ செய்ய பயனர்கள் 16 வயது அல்லது அதையும் தாண்டியிருக்கவேண்டும்,” என்று கூகல் அறிக்கையில் தெரிவித்தது.
“இது வருத்தம் தரும் தகவலாகும். இணையத்தில் பிள்ளைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இந்தச் சட்டம் பூர்த்திசெய்யாது. சொல்லப்போனால், ஆஸ்திரேலியப் பிள்ளைகளுக்கு யூடியூபில் பாதுகாப்பு மேலும் குறையும்,” என்று கூகல் வருத்தம் தெரிவித்தது.
இதேபோல் வயதுக்கு ஏற்றவாறு சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கும் மற்ற பகுதிகளும் ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வந்துள்ள தடையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பிள்ளைகளின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மின்னிலக்கச் சேவைகளை எளிதில் பயன்படுத்த வகைசெய்யும் வழிமுறைகளை மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வாறு பின்பற்றவேண்டும் என்பதற்கு இந்த விவகாரம் ஆரம்பப் புள்ளியாக அமையலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்தவை.
டிசம்பர் 10ஆம் தேதி முதல் 16 வயது அல்லது அதற்கும் கீழ் உள்ள பயனர்கள் அவர்களின் கணக்குகளிலிருந்து வெளியேற்றப்படுவர் என்று யூடியூப் குறிப்பிட்டது.

