15 வயது நிரம்பாதோர்க்குச் சமூக ஊடகத் தடை: மீண்டும் பரிந்துரைக்கும் பிரான்ஸ்

15 வயது நிரம்பாதோர்க்குச் சமூக ஊடகத் தடை: மீண்டும் பரிந்துரைக்கும் பிரான்ஸ்

1 mins read
36606e0f-80fe-4fd7-a15c-8be45f8a47e4
சிறுவர்கள், பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை விதிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள அதிபர் மெக்ரோன், 2027ல் தாம் பதவியிலிருந்து விலகுவதற்குள் இத்தடையை அமல்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாரிஸ்: பிரான்சில், 15 வயது நிரம்பாத சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பரிந்துரையை வரைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளது.

புதிய திருத்தப்பட்ட பரிந்துரையை ஐரோப்பிய ஆணையத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளதாகப் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் தெரிவித்தார்.

முன்னதாக, இத்தகைய தடையைக் கொண்டுவர பிரான்ஸ் கொண்டுவந்த சட்டத்தை அந்நாட்டின் உச்ச அரசியலமைப்பு மன்றம் ஆகஸ்ட் மாத மத்தியில் ரத்து செய்துவிட்டது. அச்சட்டம் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுரிமையைக் தேவையின்றிப் பாதிப்பதாக மன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தொழில்நுட்ப ரீதியிலான தீவிரப் பணிகளுக்குப் பிறகே புதிய வரைவு தயாரிக்கப்பட்டு, ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திரு மெக்ரோன் ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனுப்பிவைப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு இப்புதிய சட்டம் அமைவதை உறுதிசெய்யும் முக்கிய நடவடிக்கையாகும்.

சிறுவர்கள், பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை விதிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள அதிபர் மெக்ரோன், 2027ல் தாம் பதவியிலிருந்து விலகுவதற்குள் இத்தடையை அமல்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்கும் இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்து இந்த வாரம் பிரசல்சில் உரையாற்றவுள்ளார்.

சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களால் ஏற்படும் தீமைகள் குறித்த எச்சரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் அது தொடர்பான அணுகுமுறையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்