சமூக ஊடகத் தடை மீறல்: முன்னணி நிறுவனங்களிடம் ஆஸ்திரேலியா விசாரணை

சமூக ஊடகத் தடை மீறல்: முன்னணி நிறுவனங்களிடம் ஆஸ்திரேலியா விசாரணை

மாதிரிப்படம்: பிக்சாபே

31 Mar 2026 - 4:48 pm

2 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பில் ஃபேஸ்புக், டிக்டாக், யூடியூப் ஆகிய தளங்களிடம் அந்நாடு விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவில் அத்தடை நடப்பிற்கு வந்தது.

இந்நிலையில், குறிப்பிடத்தக்க விகிதத்திலான குழந்தைகள் இன்னும் சமூக ஊடகத் தளங்களைப் பார்க்க முடிவதாக ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

“ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகச் சட்டங்கள் தோல்வியுறவில்லை. ஆனால், முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அச்சட்டத்தின்படி நடப்பதில்லை,” என்று தொடர்புத்துறை அமைச்சர் அனிகா வெல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அந்நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் தொழில்புரிய வேண்டுமெனில், அவை ஆஸ்திரேலியச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ஸ்னாப்சேட், டிக்டாக், யூடியூப் ஆகிய தளங்களின் செயல்பாடு தொடர்பில் ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவற்றுக்குத் தண்டனை விதிப்பது தொடர்பில் இவ்வாண்டு நடுப்பகுதியில் முடிவெடுக்கப்படும்.

இதுவரையிலும் 16 வயதை எட்டாத, ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்டோரின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

இந்நிலையில், பயனர்களின் வயதைத் துல்லியமாக உறுதிப்படுத்துவது சவாலாக இருக்கிறது என்று ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஊடகங்களிடம் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

16 வயதிற்குடப்பட்டோரின் கணக்குகளைக் கண்டறிந்து நீக்குவதை அமல்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்துவருவதாக அந்நிறுவனம் ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனத்திடம் கூறியது.

இதுவரை அத்தகைய 450,000 கணக்குகளை முடக்கிவிட்டதாக ஸ்னாப்சேட் தெரிவித்துள்ளது.

இந்தோனீசியாவிலும் சிக்கல்

இதனிடையே, சமூக ஊடகத் தடை தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்கி நடக்காதது தொடர்பில் மெட்டா, கூகல் நிறுவனங்களுக்கு இந்தோனீசியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்தோனீசியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான தடை கடந்த வாரத்திலிருந்து முழுமையாக நடப்பிற்கு வந்தது.

இந்நிலையில், அத்தடையை நடைமுறைப்படுத்தத் தவறும் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது அத்தளங்கள் முழுமையாக முடக்கப்படும் என்று இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க அமைச்சு எச்சரித்துள்ளது.

தொடக்கத்திலிருந்தே மெட்டாவும் கூகலும் அத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக அமைச்சர் மியூத்யா ஹஃபித் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்