ஜகார்த்தா: கூகல், மெட்டா இரண்டும் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சமூக ஊடகத் தடையை மீறியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவற்றுக்கு இதோனீசியா இரண்டாவது முறையாக அழைப்பாணைகளை (summons) அனுப்பியுள்ளது.
விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளாததற்காக இரு நிறுவனங்களுக்கும் இரண்டாவது முறையாக அழைப்பாணை அனுப்பியுள்ளதாகவும் அவை தடைகளை எதிர்நோக்கக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனீசியத் தொடர்பு, மின்னிலக்க அமைச்சு தெரிவித்தது.
மக்கள், செயலிகளுக்கு அடிமையாகும் போக்கை எதிர்நோக்கும் இந்தோனீசியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கான சமூக ஊடகத் தடை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இணையத்தில் இடம்பெறும் ஆபாசப் படங்கள்/காணொளிகள், இணையப் பகடிவதை, இணையத்துக்கு ‘அடிமை’யாகும் போக்கு போன்ற பிரச்சினைகளிலிருந்து இளையர்களைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடையை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு கூகலும் மெட்டாவும் கேட்டுக்கொண்டதாக அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது. அவ்விரு நிறுவனங்களும் இவ்வாரத் தொடக்கத்தில் விடுக்கப்பட்ட முதல் அழைப்பாணைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“தடைகளை விதிப்பதற்கு முன்பு அதிகபட்சமாக மூன்று முறை அழைப்பாணை பிறப்பிக்கப்படலாம்,” என்று அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்தது.

