காட்மாண்டு: நேப்பாளத்தில் கலவரம் வெடித்ததற்குக் காரணமாக இருந்த சமூக ஊடகம் இப்போது அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான உந்துகோலாகத் திகழ்கிறது.
நேப்பாள அரசாங்கம் இந்த வாரம் சமூக ஊடகங்களைத் தடை செய்ய முற்பட்டதை அடுத்து வன்முறை ஆர்ப்பாட்டங்கள் மூண்டதுடன் பிரதமரின் ஆட்சியும் கவிழ்ந்தது. நாடாளுமன்றம் தீயில் கருகியது. ராணுவ வீரர்கள் சாலைகளில் குவிந்தனர்.
காவல்துறைக்கும் இளையர்கள் வழிநடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டதில் 30க்கும் அதிகமானோர் மாண்டனர்.
பொருளியல் ஏற்றத்தாழ்வு, ஊழல், சமூக ஊடகத் தளங்களை முடக்கியது ஆகியவற்றை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இம்மாதம் 9ஆம் தேதி நேப்பாள அரசாங்கம் நிலைகுலைந்ததை அடுத்து, தலைநகர் காட்மாண்டுவில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் பெரிய அளவிலான கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
நாட்டில் அரசியல் குழப்பும் நிலவும் வேளையில், மெய்நிகர் தளத்தில் 100,000க்கும் அதிகமான குடிமக்கள் அடிக்கடி சந்தித்து நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கின்றனர்.
கணினி விளையாட்டளர்களிடையே மிகப் பிரபலமாக இருக்கும் டிஸ்கோர்ட் (Discord) என்ற தளம், நாட்டின் அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கும் தளமாக மாறியுள்ளது.
குரல் பதிவுகள், காணொளிகள், குறுஞ்செய்திகள் என பல்வேறு வடிவங்கள் டிஸ்கோர்ட் தளத்தில் மக்கள் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். அது தேசிய தொலைகாட்சியிலும் செய்தி ஒளிவழிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஹமி நேப்பால் என்ற குடிமை அமைப்பின் உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட தளத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஜென் சி என்றழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்த ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாதம் 9ஆம் தேதி நேப்பாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி திடீரென பதவி விலகியதால் நாட்டின் அதிகாரம் ராணுவத்தின் கையில் உள்ளது. நாட்டின் அடுத்த தலைவரைப் பெரும்பாலும் முடிவுசெய்யும் ராணுவத் தலைவர் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகிக்க தகுதியாக இருப்பவரின் பெயரைச் சமர்ப்பிக்கும்படி டிஸ்கோர்ட் தளத்தை அமைத்தவர்களிடம் கேட்டுள்ளார்.
பல சுற்று கலந்துரையாடல்களுக்கும் கருத்துக் கணிப்புகளுக்கும் பிறகு நேப்பாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை டிஸ்கோர்ட் தள அமைப்பாளர்கள் முன்மொழிந்தனர்.