நார்வேயில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை

நார்வேயில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டுக்குத் தடை

2 mins read
ef0e422a-1ba1-4e8a-be1b-6cb26cc2bb79
பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகள், சமூக வலைத்தளங்களுக்கான மின்னிலக்க வயதை அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. - படம்: இபிஏ
Google News Preferred Icon

ஆஸ்லோ: 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய முற்படும் ஆகக் கடைசி நாடாக நார்வே சேர்ந்துள்ளது. இதன்மூலம், 2026ஆம் ஆண்டில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 24) நார்வே அறிவித்தது. மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அது கூறியது.

“குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கக்கூடிய ஒரு பாலர் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். விளையாட்டு, நட்பு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவை கணினித் திரைகளாலும் அதன் செயல்பாடுகளாலும் ஆக்கிரமிக்கப்படக்கூடாது,” என்று பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“குழந்தைகளின் மின்னிலக்க வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை இது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் சமூக இணையத்தளங்களுக்கான மின்னிலக்க வயது வரம்பை அறிமுகப்படுத்தப் போவதாக ஏற்கெனவே கூறியுள்ளன. மேலும், ஆஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகள் ஏற்கெனவே அவ்வாறு செய்துள்ளன.

ஐரோப்பிய ஆணையமும், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில் தனது உறுதியைத் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மாத நடுப்பகுதியில், வயது சரிபார்ப்பு செயலி ஒன்றை அது வெளியிட்டது. இச்செயலி விரைவில் ஐரோப்பிய குடிமக்களுக்குக் கிடைக்கும்.

“தொழில்நுட்ப நிறுவனங்கள் வயது வரம்பு மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படாத தளங்களிலிருந்து விலகி இருக்கும் பொறுப்பை அவர்கள் மீது சுமத்த முடியாது,” என்று நார்வேயின் மின்னிலக்கமயமாக்கல் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் கரியான் துங் மேலும் கூறினார்.

“அந்தப் பொறுப்பு இந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களையே சாரும். அவர்கள் திறம்பட வயது சரிபார்ப்பைச் செயல்படுத்தி, முதல் நாளிலிருந்தே சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்”.

தேசிய திரை நேர வழிகாட்டுதல்கள் மற்றும் கைப்பேசி இல்லாத பள்ளிகளுக்கான பரிந்துரைகள் உள்ளிட்ட, அரசாங்கம் ஏற்கெனவே எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, கைப்பேசிகளை வைத்திருக்கும் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
நார்வேமின்னிலக்கம்கைப்பேசி