சமூக ஊடகப் பயன்பாடு: குறைந்தபட்ச வயது நிர்ணயித்த ஐக்கிய அரபு சிற்றரசுகள்

சமூக ஊடகப் பயன்பாடு: குறைந்தபட்ச வயது நிர்ணயித்த ஐக்கிய அரபு சிற்றரசுகள்

https://www.straitstimes.com/world/middle-east/uae-sets-minimum-social-media-age-at-15-mandates-age-checks
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2026 - 6:30 am

2 mins read

துபாய்: சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு சிற்றரசுகள் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 15 என அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான வயது கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ள முதலாவது அரபு நாடு ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகும்.

வியாழக்கிழமையன்று (ஜூன் 18) அங்கீகரிக்கப்பட்ட புதிய தீர்மானத்தின்படி, 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது இயக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அவர்கள் எந்தவொரு பதிவையும் பதிவிடவோ, கருத்து தெரிவிக்கவோ, பகிரவோ அல்லது பொதுக் குழுக்களில் இணையவோ முடியாது. அதே வேளையில், 15 மற்றும் 16 வயதுடைய பதின்ம வயதினர் தங்களின் பெற்றோரின் மேற்பார்வை, திரை நேரக் கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வயதுக்கு ஏற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இயங்கும் அனைத்துச் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் பொருந்தும் இந்த விதிகளின்படி, பயனர்களின் வயதை உறுதி செய்ய மின்னிலக்க அடையாளச் சோதனை மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களது வயதைச் சொந்தமாக உறுதி செய்வதை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலும், 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் கணக்குகளை நிறுவனங்கள் முடக்க வேண்டும் என்பதோடு, குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தகுந்த பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகளைப் பின்பற்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஐக்கிய அரபு சிற்றரசுகள்சமூக ஊடகம்வயது