கோலாலம்பூர்: மனஅழுத்தம், மனச்சிதைவு ஆகியவற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் இயலாமைத் திட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தகுதிபெறும் ஊழியர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் உள்ளிட்ட அனுகூலங்கள் இதன் மூலம் கிடைக்கும்.
மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்த மனநல நோய்கள் பணிச்சூழலால் நேரடியாக ஏற்படுபவை அல்ல. அதனால் அவை பொதுவான சுகாதாரப் பிரச்சினைகளாக வகைப்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
அதேவேளையில், பணியிட ஆபத்துகளால் ஏற்படும் குறிப்பிட்ட நோய்கள், 1969ஆம் ஆண்டின் ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேலைக்காயத் திட்டத்தின் வழியே ஈடுசெய்யப்படும்.
ஒரு நோய் வேலையிடப் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதைச் சிறப்பு மருத்துவ வாரியமும் மேல்முறையீட்டு மருத்துவ வாரியமும் முடிவு செய்யும். அதற்குத் தகுந்த ஆதாரங்களும் புலனாய்வு முடிவுகளும் அவசியம் என்று அமைச்சர் விளக்கினார்.
பணியிட மனஅழுத்தத்தால் ஏற்படும் தீராநோய்களைத் தொழில்சார் நோய்களாக அறிவிக்கத் திட்டமுள்ளதா என்று செனட்டர் எஸ்.வேள்பாரி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
மன அழுத்தம் போன்ற நிலைகள் வேலையிடக் காரணங்களால் நேரடியாக ஏற்படுபவை அல்ல என்பதால், அவை பணிசார் நோய்களாக வகைப்படுத்தப்படுவதில்லை என்று அமைச்சர் விளக்கினார்.
இருப்பினும், வேலையிட ஆபத்துகளால் ஏற்படும் நோய்கள் 1969ஆம் ஆண்டின் ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 'வேலைக்காயத் திட்டத்தில்' சேர்க்கப்படும்.
ஒரு நோய் பணிசார் நோயா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சிறப்பு மருத்துவ வாரியத்திற்கு உண்டு. அதற்கு உரிய புலனாய்வுகளும் சான்றுகளும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் வேலைமுறைகள் மற்றும் மூப்படையும் ஊழியரணியைக் கருத்தில்கொண்டு, சுகாதார வழிகாட்டுதல்களை அரசு தொடர்ந்து மறுஆய்வு செய்து வருகிறது. மருத்துவ வாரிய உறுப்பினர்களுக்குச் சொக்சோ ஆண்டுக்கு மூன்று முறை பயிற்சிகளை வழங்குகிறது.
மேலும், வேலையிடப் பதற்றத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு இலவசக் கருத்தரங்குகள், பணியாளர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கச் சிறப்புப் போட்டித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

