சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் எல்லைத் தாண்டிய ஊழியர்களை உள்ளடக்கும் ‘சொக்சோ’ திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது: ரமணன்

சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் எல்லைத் தாண்டிய ஊழியர்களை உள்ளடக்கும் ‘சொக்சோ’ திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது: ரமணன்

2 mins read
03cb6a81-cdd0-44a1-9565-c1df1d7b184d
‘சோக்சோ’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியன் முறைசார் தொழிலாளர்கள் பயனடைவர்.  - படம்: சாவ்பாவ்

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் பணிக்குத் தினமும் சென்று திரும்பும் 400,000க்கு மேற்பட்ட மலேசியர்களைப் பாதுகாக்கும் நோக்கில், சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) கீழ் ‘பயணிகள் திட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவை மனிதவள அமைச்சு மலேசிய அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

நாட்டின் சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் இந்த முன்னெடுப்பு என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார்.

“கூடுதலாக, பிரசவத்தின்போது தாய்மார்களுக்கும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது குறித்த ஓர் ஆய்வையும் நாங்கள் இறுதி செய்து வருகிறோம்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பதவியேற்ற தனது முதல் 100 நாட்களைப் பற்றிப் பேசிய ரமணன், குறிப்பாக சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தொழிலாளர் நலன் ஆகியவற்றில், மக்களுக்கு நேரடியான, நீண்டகாலப் பலன்களை வழங்கும் கொள்கைகளுக்கு மனிதவள அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது என்று கூறினார்.

“இந்தக் குறுகிய காலத்தில், எங்களின் கவனம் தற்காலிக நடவடிக்கைகளில் மட்டும் இல்லாமல், விரிவான, நீடித்த முயற்சிகளில் இருந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த முயற்சிகள் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படும், சொக்சோ திட்டத்தின் கீழ் நாள்தோறும் 24 மணிநேரப் பாதுகாப்புத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது முக்கிய மைல்கற்களில் ஒன்றாகும்.

சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், ‘மலேசியாவுக்கு வருகை தாருங்கள் 2026’-ஐ முன்னிட்டு, மனிதவள அமைச்சு 10,000 தொழில்துறை ஊழியர்களுக்கு இலவசத் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், மலேசிய ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்களுக்கான ஓர் ஒருங்கிணைந்த சூழலமைப்பை உருவாக்குவதற்காக, சொக்சோ அமைப்பானது ‘பெர்ஹெபாட்’ (PERHEBAT) மற்றும் முன்னாள் படைவீரர்கள் விவகாரங்கள் துறையுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ‘எனது எதிர்கால வேலைகள்’ (MYFutureJobs) வீரா தொழில் பாதுகாப்புத் திட்டத்தின் வழியாக 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் திரு ரமணன் கூறினார்.

“திறன் மேம்பாடு ஒரு முக்கிய முன்னுரிமையாகத் தொடர்கிறது. மனிதவளத் துறையின் கீழ் மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் பயிற்சி முயற்சிகள் 90,000 பேருக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் திரு ரமணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்