தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் பிரதமரைப் பதவி விலக வைத்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய சமூகவியல் மாணவர்

2 mins read
19fd969e-e1ea-4d4d-84eb-e069d0fdcba9
பிரதமர் ஷேக் ஹசினாவைப் பதவி விலக வைத்து, பங்ளாதேஷிலிருந்து தப்பியோட வைத்த ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தினார் திரு நஹிட் இஸ்லாம், 26. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பிரதமர் ஷேக் ஹசினாவை 15 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பதவி விலக வைத்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியவர், அமைதியான முறையில் பேசும் சமூகவியல் மாணவர் நஹிட் இஸ்லாம்.

வழக்கமாகப் பொது இடங்களில், அவர் நெற்றியில் பங்ளாதேஷ் கொடியைக் கட்டியிருப்பார்.

திரு இஸ்லாம், 26, அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

ஜூலை மாத நடுப்பகுதியில், ஆர்ப்பாட்டங்கள் மோசமான நிலையில் காவல்துறையினர் திரு இஸ்லாமையும் டாக்கா பல்கலைக்கழக மாணவர்களையும் தடுத்துவைத்தனர். அப்போது அவர் தேசிய அளவில் புகழ்பெற்றார்.

பங்ளாதேஷ் முழுதும் பல வாரங்களாக நடந்த வன்செயல்களில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள்.

திருவாட்டி ஹசினா பதவி விலகி, ஆகஸ்ட் 5ஆம் தேதி அண்டை நாடான இந்தியாவிற்குத் தப்பியோடிய பிறகு மட்டுமே, அந்த ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தன.

இந்நிலையில், திரு இஸ்லாம் பொது இடத்தில் உறுதியுடன் பேசியபோது, மாணவர்கள் ராணுவம் வழிநடத்தும் அல்லது ஆதரவு தெரிவிக்கும் எந்தவோர் அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

அதோடு, நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகராக இருக்கவேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.

“நாங்கள் பரிந்துரைக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று திரு இஸ்லாம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

“வாழ்க்கைப் பாதுகாப்பு, சமூக நீதி, புதிய அரசியல் சூழல் என்ற நமது உறுதிமொழியின் மூலம் நாங்கள் புதிய ஜனநாயக பங்ளாதேஷை உருவாக்குவோம்,” என்றார் அவர்.

திரு இஸ்லாம் 1998ஆம் ஆண்டு டாக்காவில் பிறந்தார். திருமணமாகியுள்ள அவருக்கு, நக்கிப் என்ற இளைய சகோதரரும் உள்ளார்.

“அவருக்குக் கடும் உள்ளுறுதி இருக்கிறது. நாடு மாற வேண்டும் என்று அவர் எப்போதும் கூறியிருக்கிறார்,” என்று நக்கிப் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“அவர் காவல்துறையினரால் பிடிபட்டு, சுயநினைவு இழக்கும்வரை சித்திரவதை செய்யப்பட்டு, சாலையில் தூக்கி எறியப்பட்டார். இருந்தாலும், அவர் தொடர்ந்து போராடுகிறார்.

“அவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அவரை நினைத்து எங்களுக்குப் பெருமையாக உள்ளது,” என்று நக்கிப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்