கோலாலம்பூர்: பத்துமலையில் மின்படிக்கட்டுகள் அமைப்பது தொடர்பாக நீண்டகாலம் நீடிக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் ஆர். நடராஜா கூறியுள்ளார்.
ஜூலையில் அதற்கு தீர்வு காணப்பட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பத்துமலையில் தைப்பூச ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வரும் நிலையில் அவர் மின்படிக்கட்டுப் பிரச்சினை பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
மின்படிக்கட்டுகளை அமைக்க தொழில்நுட்ப இடையூறுகளே எஞ்சியிருக்கின்றன என்று சிலாங்கூர் முதல்வர் அமிரூதின் ஷாரி கூறியிருப்பதாகவும் அவற்றை விரைவில் தீர்த்து வைக்க அவர் உறுதியளித்துள்ளதாகவும் திரு நடராஜா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை பத்துமலைக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வருகையளித்தபோது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இதற்காக சிலாங்கூர் முதல்வருக்கும் நடராஜாவுக்கும் இடையே தனிப்பட்ட சந்திப்புக்கு பிரதமர் ஏற்பாடு செய்திருந்தார்.
“என்னையும் முதலமைச்சரையும் அழைத்துப் பேசிய பிரதமர், மின்படிக்கட்டு விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும், இது, ஒரு சமூக விவகாரம், நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடாது,” என்று பிரதமர் வலியுறுத்தியதாக நடராஜா மேலும் தெரிவித்தார்.
மின்படிக்கட்டுகள் உட்பட வணிக வளாகத்திற்கு தற்காலிமாக இடத்தைப் பெறும் உரிமத்தை சிலாங்கூர் அரசாங்கம் நிராகரித்துவிட்டதால் உத்தேச மின்படிக்கட்டுத் திட்டத்தில் தடை ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இம்முடிவால் பல வகையில் திட்டம் தாமதமடைந்தது.
இருப்பினும், மாநில அரசாங்கத்துடன் ஆலயம் முரண்படவில்லை என்று நடராஜா வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய கருத்து வேறுபாடு அல்ல, மாறாக தொழில்நுட்ப தாமதம் என்று அவர் விவரித்தார்.
“இது ஒரு தொழில்நுட்ப விவகாரம் மட்டுமே, ஆனால் மக்கள் இதைப் பெரிய விவகாரமாக்கிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதால், பொதுமக்கள் ஊகிப்பதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்கீழ் ஆலயம் இயங்குவதையும் அவர் நினைவுபடுத்தினார்.
பெர்னாமா செய்தி நிறுவனம் இந்த விவரங்களை வெளியிட்டிருந்தது.

