லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் குறைந்தது மூவர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஹங்டிங்டன் பீச் நகரில் நிகழ்ந்தது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (அக்டோபர் 11) பிற்பகல் இரண்டு மணியளவில் ஒரு ஹெலிகாப்டர் கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியதாக ஹங்டிங்டன் பீச் காவல்துறைப் பிரிவு சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
நடைப்பாலத்தை இணைக்கும் மாடிப்படி மீது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது போல் சம்பவ இடம் பதிவான படங்களில் தெரிந்தது.
ஹெலிகாப்டரில் இருந்த இருவர் இடிபாடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தரையில் இருந்த மூவர் காயமடைந்ததாகவும் காவல்துறை கூறியது. ஐவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர் அவர்கள் எவ்வளவு மோசமான காயங்களுக்கு ஆளாயினர் என்பதைத் தெரிவிக்கவில்லை.
பீச் புலவார்ட், ஹங்டிங்டன் ஸ்திரீட் ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலைப் பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை, மக்களைக் கேட்டுக்கொண்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடைபெறவிருந்த ‘கார்ஸ் ‘என் காப்டர்ஸ் ஆன் தி கோஸ்ட்’ (Cars ‘N Copters on the Coast) நிகழ்ச்சியில், விழுந்து நொறுங்கிய விமானம் இடம்பெறவிருந்தது. அந்நிகழ்ச்சியில் மாறுபட்ட அதிநவீன கார்களும் ஹெலிகாப்டர்களும் இடம்பெறும் என்று தெரியவந்தது.