ஜகார்த்தா: பற்பல ஆண்டுகளாக இந்தோனீசியாவின் எரிபொருள் வர்த்தகத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவரின் மகன் 17 பில்லியன் டாலர் (21.5 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஊழல் விவகாரத்தில் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனம் சம்பந்தப்பட்ட இவ்வழக்கில் முகம்மது கெரி அட்ரியாந்தோ ரிஸாவுக்கு, நீதிபதிகள் குழு ஒன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாக அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர் ஒரு பில்லியன் ரூப்பியா (75,000 வெள்ளி) அபராதமும் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட 2.9 டிரில்லியன் மதிப்பிலான இழப்புகளுக்கு ஈடுகட்டவும் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரின் சொத்துகள் முடக்கப்படும்.
இந்தோனீசிய சட்டப்படி பிரதிவாதிகள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய ஏழு நாள்கள் அவகாசம் கொடுக்கப்படும். கருத்து கேட்கப்பட்டதற்கு கெரியின் தரப்பு பதிலளிக்கவில்லை.
இதோனீசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான பெர்த்தாமினா எரிசக்தி நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் கெரிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புதான் ஆக அதிகமாகப் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒன்றாகும். ஏற்கெனவே பெர்த்தாமினாவில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளில் அறுவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கெரி, பல ஆண்டுகளாக இந்தோனீசியாவின் எண்ணெய்ப் பொருள் இறக்குமதிகளைக் கையாண்ட முகம்மது ரிஸா சாலிட்டின் மகனாவார்.

