மருமகனின் நச்சுச் சதி; கொலையுண்ட மாமியார்

மருமகனின் நச்சுச் சதி; கொலையுண்ட மாமியார்

படம்: பிக்சாபே

09 Jun 2026 - 5:38 pm

2 mins read

சிமாராங்: இந்தோனீசியாவின் மத்திய ஜாவா பகுதியில், மாமியாருக்கு உணவில் எலி விஷம் வைத்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது புர்வாடி வஹ்யுடி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரது மாமியாரான 57 வயது அமினா கடந்த மே மாதம் மாண்டார்.

வேலை இல்லாதவரான புர்வாடி, தமது மாமியார் தம்மைத் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதற்காகக் கோழி இறைச்சி சாத்தேயை வாங்கி, அவற்றில் எலி விஷத்தைப் புர்வாடி கலந்துள்ளார். பின்னர், மாமியாரின் இரண்டாவது மகளான லூரியாந்தியின் பெயர் மற்றும் புகைப்படத்தை விநியோகச் சேவை ஒன்றின் செயலியில் பயன்படுத்தி, அதன் மூலம் கடந்த மே மாதம் 18ஆம் தேதியன்று திருவாட்டி அமினாவின் முகவரிக்கு அந்த நச்சு உணவை அனுப்பியுள்ளார். லுரியாந்தியின் அக்காவை புர்வாடி திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புர்வாடியைப் பார்த்த உணவு விநியோக ஊழியருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உணவை அனுப்புபவர் ஒரு பெண் என்று செயலி காட்டியபோது, நேரில் சென்று பார்த்தபோது புர்வாடி உணவை அவரிடம் கொடுத்ததே இந்தச் சந்தேகத்துக்குக் காரணம்.

தாம் திருவாட்டி அமினாவின் புதல்வர் என்று கூறி புர்வாடி சமாளித்துக்கொண்டார்.

உணவைப் பெற்றுக்கொண்ட திருவாட்டி அமினா, தமக்கு அனுப்பிவைக்கப்பட்ட உணவைப் பற்றி தமது மகளுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தாம் உணவு எதுவும் அனுப்பவில்லை என்றும் அதைச் சாப்பிட வேண்டாம் என்றும் மகள் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், அடுத்த நாள் திருவாட்டி அமினாவின் வீட்டிற்குச் சென்ற லுரியாந்தி, தமது தாயார் வாந்தி எடுத்த நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அமினாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மே மாதம் 30ஆம் தேதியன்று அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. உடலிலும் ஆடைகளில் இருந்த வாந்தி மாதிரிகளிலும் எலி விஷம் கலந்திருப்பது தடயவியல் ஆய்வகச் சோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

மாமியாரைக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், புர்வாடிக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்