தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்சிக் கொடி ஏற்றுவதில் தகராறு; மகனைச் சுட்டுக் கொன்ற தந்தை

1 mins read
992e6ee6-396a-4019-b54a-1c36810b72f2
மாதிரிப்படம்: - ராய்ட்டர்ஸ்

பெஷாவர்: தங்கள் வீட்டில் எந்தக் கட்சிக் கொடியை ஏற்றுவது என்ற தகராற்றில் தந்தையே மகனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்தது.

கத்தாரில் வேலைசெய்து வந்த அந்த 31 வயது மகன் அண்மையில்தான் தாய்நாடு திரும்பினார்.

அவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் ஆதரவாளர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாநிலம், பெஷாவரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டில் அந்த ஆடவர் பிடிஐ கட்சியின் கொடியை ஏற்றியதாகக் கூறப்பட்டது.

அதற்கு, இன்னொரு கட்சியின் ஆதரவாளரான அவருடைய தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், பிடிஐ கட்சிக் கொடியைக் கீழிறக்குமாறும் தன் மகனை அவர் வலியுறுத்தினார்.

ஆனால், அவருடைய மகன் அதற்கு இணங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து, இருவருக்கு இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அந்தத் தந்தை, தன் மகனைத் துப்பாக்கியால் சுட்டார்.

பலத்த காயமடைந்த மகன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் இறந்துவிட்டார்.

தப்பியோடிய தந்தையைக் காவல்துறை தேடி வருவதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் அங்கு நிலவும் அரசியல் பதற்றநிலையைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்