கோலாலம்பூர்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் பாரிசான் நேஷனல் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகும் என்று அக்கூட்டணியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதுவரை ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம் என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 27) உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 18வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அந்தத் தருணத்திலிருந்தே, நாங்கள் அந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கமாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“மலேசிய மாமன்னரிடம் நாங்கள் அளித்த வாக்குறுதி அது. ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்தபோது நாங்கள் மேற்கொண்ட உறுதிமொழி அது.”
“ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் பங்கேற்பது என்பது அதன் அரசியல் அடையாளத்தையோ அல்லது நிலைப்பாடுகளையோ விட்டுக்கொடுப்பதாக அர்த்தமல்ல,” என்று ஸாஹிட் கூறினார்.
“பாரிசான் எப்போதும் பாரிசானாகவே நீடிக்கும்,” என்று அவர் கூறினார். “எங்கள் உடன்படிக்கை தேசிய அளவிலானது. ஜோகூர் உள்ளிட்ட அண்மைய மாநிலத் தேர்தல்கள், அந்த கொள்கையை எங்களால் நிலைநிறுத்த முடியும் என்பதைக் காட்டின.
“மாநில அளவில் நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடவும், வெவ்வேறு அரசியல் கூட்டணிகளைக் கொண்டிருக்கவும் முடியும். அதனால்தான் ஜோகூரில் உள்ள அனைத்து 56 இடங்களிலும் நாங்கள் போட்டியிட்டோம்,” என்று அவர் மேலும் கூறியதாக தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது.
