சோல்: தென்கொரியாவின் சோல் நகரில் உள்ள உணவகம் ஒன்று, பிரபல உணவு மேசையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதாவது ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த மேசையைப் பயன்படுத்த முடியாது.
அந்த இடத்தில்தான் ‘என்விடியா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன்சன் ஹுவாங், சோலில் உள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹுயுண்டாய் மோட்டார் தலைவர்களுடன் கோழி உணவுடன் பியர் அருந்தி மகிழ்ந்தார்.
உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் உணவருந்திய இடத்தில் தாங்களும் உணவருந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இடத்தைப் பிடிக்க நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருகிறது. இதனால் உணவகத்தின் நிர்வாகிகள் அந்த மேசையை அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு மட்டும் பயன்படுத்த வரம்பு விதித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 4) வெளியான உள்ளூர் செய்தி தெரிவித்தது.
தெற்கு சோலில் சாம்சியோங்-டோங்கில் ‘கான்பு சிக்கன்’ என்ற அந்த உணவகத்தில் அறிவிப்புடன் ஒரு புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
“தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் அமர்ந்திருந்த மேசையை அனைவரும் ஒரு மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். வருகையாளர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்,” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பலர் சமூக ஊடகங்களில் தீயாகப் பரப்பி வருகின்றனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
கியோங்ஜுவில் ஏபெக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு உலகின் மூன்று முன்னணி நிறுவனங்களின் தலைவர்களான என்விடியா நிறுவனத்தின் ஹுவாங், சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ ஜே-யங், ஹுயுண்டாய் மோட்டார் குழுமத்தின் தலைவர் சுங் இயு-சன் ஆகியோர் அக்டோபர் 31ஆம் தேதி சோலில் உள்ள அந்தப் பிரபல கோழி உணவகத்தில் சாப்பிட்டனர். இந்த இடத்தை திரு ஹுவாங் தேர்ந்தெடுத்திருந்தார்.
உள்ளூர், உலகளாவிய ஊடகங்கள் இந்த விருந்து நிகழ்ச்சியை விரிவாக வெளியிட்டிருந்ததால் அந்த உணவு மேசை பிரபலமானது.
‘கான்பு’ என்றால் கொரிய வட்டார மொழியில் நெருங்கிய நண்பன் எனப் பொருள்படும்.

