வியாழக்கிழமை பின்னிரவு 2 மணி இருக்கும். சிங்கப்பூர் நிரந்தரவாசியான டீ யோவ் கிங், தமது கூடாரத்தில் உறங்கவிருந்தார். அப்போது திடீரென பெரிய சத்தம் கேட்டது.
ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த அவர், உடனடியாக தம்முடைய மனைவியையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டார்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், உலு யாம் பாரு காவல் நிலையத்திலிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு டீ, 37, "சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. இதற்குமுன் இதுபோன்ற சத்தத்தை நான் கேட்டதில்லை. மரங்கள் பிளப்பது போன்ற சத்தம் அது.
"சத்தம் எங்களை நோக்கி வருவதுபோன தெரிந்தது. ஆனால், இருட்டில் கூடாரத்தைவிட்டு வெளியேறுவதற்கு தாமதாகிவிட்டது. கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் நடந்தேறிவிட்டது. உயிர் தப்பியதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்," என்றார்.
இந்தச் சம்பவத்தில் திரு டீ, அவருடைய மனைவி, ஏழு மற்றும் மூன்று வயதுடைய இரு பிள்ளைகள் ஆகியோருக்கு அதிசயமாக காயம் ஏற்படவில்லை.
மலேசிய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து விடுமுறையில் சென்றிருந்தார் திரு டீ.
கெந்திங் மலை அருகே வியாழக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 19 பேர் இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்தார். சிலாங்கூரில் உள்ளர் செலாயாங் மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

