தென்னாப்பிரிக்கா: ஆபத்தில் 30 ஆண்டு ஆட்சி

தென்னாப்பிரிக்கா: ஆபத்தில் 30 ஆண்டு ஆட்சி

2 mins read
8454df4b-6c4e-4696-8a47-fbfa1c8b0c70
தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் மே 29ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 30 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்து ஆட்சி செய்து வந்த ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் கட்சி இம்முறை அதை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக வாக்கு எண்ணும் பணிகள் அந்நாட்டில் தீவிரமாக நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 52 விழுக்காடு வாக்கு நிலையங்களில் வாக்கு எண்ணப்பட்டுவிட்டதாகவும் அதில் ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் கட்சிக்கு 42.3 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு அந்தக் கட்சி 57.5 விழுக்காடு வாக்குகள் பெற்று ஆட்சியமைத்திருந்தது.

முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் கட்சி வளர பெரும் பங்கு வகித்தார். ஆனால் தற்போது அந்தக் கட்சி சரியாக செயல்படத் தவறியதால் அதன் மீது தென்னாப்பிரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதுவே அக்கட்சியின் வாக்கு சரிவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

சிறுபான்மையினரான வெள்ளை இன மக்களின் ஆட்சியை வீழ்த்தி 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது ஆப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் கட்சி. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக பொருளியல் வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை என பல்வேறு பிரச்சினைகள் தென்னாப்பிரிக்காவில் தலைதூக்கியுள்ளன.

இதனால் இம்முறை தேர்தலில் ஆப்ரிக்கன் நே‌ஷனல் காங்கிரஸ் கட்சி 40.5 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெறும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களில் வரும் கட்சிகள் சிறு சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்யக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தென்னாப்பிரிக்க சட்டத்தின்படி முழு தேர்தல் முடிவுகள் தேர்தல் நடந்த ஏழு நாள்களுக்குள் அறிவிக்கப்பட வேண்டும். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க தென்னாப்பிரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்றவர்களே நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் தென்னாப்பிரிக்காவின் அரசியல் வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே என்பதால் தற்போதைய அதிபர் சிறில் ராமபோசாவின் பதவிக்கு ஆபத்து ஏதும் இருக்காது என்றும் சில கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்