போராட்டங்களைச் சந்திக்க ஆயத்தமாகின்றன தென்னாப்பிரிக்க நகரங்கள்

போராட்டங்களைச் சந்திக்க ஆயத்தமாகின்றன தென்னாப்பிரிக்க நகரங்கள்

1 mins read
f3d6265c-acea-4d61-bd03-86279f0d8337
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு வெளியே சாலைகளில் வெளிநாட்டினர் உறங்குகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

டர்பன்: தென்னாப்பிரிக்கா முழுதும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஊழியர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். கடைகள் மூடப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை.

குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது. அந்தப் போராட்டங்கள் வன்முறையாக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இயல்பு வாழ்க்கை அங்கு நிலைகுத்திப் போயிருக்கிறது.

ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளைச் சேர்ந்த பலர் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்தனர். மேலும் ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் அனைவரும் செவ்வாய்க்கிழமைக்குள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் காலக்கெடு நிர்ணயித்திருந்தனர். அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிலிருந்து தப்பியோடிவிட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த காலத்தில் நடந்த இத்தகைய போராட்டங்களில் குடியேறிகளுக்கும் அவர்களின் சொத்துகளுக்கும் எதிரான போராட்டங்கள் கலவரங்களாக மாறின. அந்தக் கலவரங்களில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்போர், சட்டவிரோதமாக நுழைந்தோர் என இருதரப்பினருமே பெரிய வித்தியாசமின்றிப் பாதிப்புக்கு ஆளாயினர்.

தலைநகர் ஜோகன்னஸ்பர்கிலும் துறைமுக நகரமான டர்பனிலும் வீட்டு உரிமையாளர்கள், தங்களின் கட்டடங்கள் சேதத்திற்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

பல நகரங்களில் காவல்துறையினரும் ராணுவத்தினரும் சாலைகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டங்களில் பெரும்பாலும் ஏழைகளும் வேலையில் இல்லாத தென்னாப்பிரிக்கர்களும் பங்கெடுப்பர் என்று நம்பப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

எதிர்ப்பு ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொறுப்பும் கடமையும் நாட்டுக்கு இருப்பதாகக் காவல்துறையின் துணை ஆணையர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்