தோக்கியோ: ஜப்பானிய விவசாயத் துறையில் பங்ளாதேஷ், நேப்பாளம் போன்ற தெற்காசிய நாடுகளின் தொழிலாளர்கள் தடம் பதித்து வருகின்றனர்.
பண்ணைகளில் நிலவும் ஆள்பற்றாக்குறையைச் சமாளிக்கத் தென்கிழக்காசியத் தொழிலாளர்களைவிடத் தெற்காசியத் தொழிலாளர்கள் அங்கு அதிக அளவில் பணிபுரிகின்றனர்.
வியட்னாம், பிலிப்பீன்ஸ் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளதால், தெற்காசியத் தொழிலாளர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது எனக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கத் தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் விவசாயத் துறையில் நிலை-1 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 26 விழுக்காடு உயர்ந்து 44,050ஆகப் பதிவாகியுள்ளது. அவர்கள் ஐந்து ஆண்டுகள்வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜப்பானியக் குடிநுழைவுச் சேவைகள் முகவையின்படி, 18,255 தொழிலாளர்களுடன் இந்தோனீசியா முதலிடத்தில் திகழ்கிறது.
நேப்பாளம் 30 விழுக்காடு அதிகரித்து 916ஆகவும், இலங்கை 60 விழுக்காடு உயர்ந்து 638ஆகவும், பங்ளாதேஷ் 127 விழுக்காடு அதிகரித்து 334ஆகவும் உள்ளன.
வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் சம்பளம் அதிகரித்துள்ளதால், விவசாயத் தொழிலாளர்களை ஈர்ப்பதில் ஜப்பான் சவால்களை எதிர்கொள்வதாக ‘சஸ்டெய்னபிள் ஹோல்டிங்ஸ்’ பொது மேலாளர் யுஜி நோமுரா குறிப்பிட்டார்.
“நாங்கள் தொழிலாளர் விநியோகத்திற்காகத் தெற்காசியாவை நோக்கி நகர்ந்து வருகிறோம். பங்ளாதேஷ் 170 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட விவசாய நாடு. அங்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
திறமையான தொழிலாளர் தகுதியைப் பெற, தொடக்கநிலை ஜப்பானிய மொழித் தேர்வு, விவசாய எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும்.
வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பானிய விவசாயத் துறையில் நீண்டகாலமாகத் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, விவசாயத் துறையில் திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பயிற்சி பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 67,905ஆக இருந்தது.
விவசாய அமைச்சின் தகவல்படி, 39,234 திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தோனீசியா, வியட்னாம் நாடுகள் 60 விழுக்காட்டுக்கு மேல் பங்களிக்கின்றன.
வேகமாக வளரும் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஜப்பானில் உள்ள தெற்காசியர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது.
