சோல்: தென்கொரியாவில் ஜேஜு ஏர் விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) நிலவரப்படி ஐவரின் உடல்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், நடவடிக்கையை வேகப்படுத்த கூடுதல் ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தேசியக் காவல்துறை அமைப்பு கூறியது.
விமான விபத்து நிகழ்ந்த முவான் அனைத்துலக விமான நிலையத்தில் திரண்ட குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கோரியுள்ளனர்.
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங் மோக், நாட்டின் ஒட்டுமொத்த விமானச் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்புச் சோதனையை அவசரமாக நடத்தும்படி திங்கட்கிழமை (டிசம்பர் 30) உத்தரவிட்டார்.
தென்கொரிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் போயிங் 737-800 வகையைச் சேர்ந்த 101 விமானங்களையும் பரிசோதிக்கும் பணிகள் ஜனவரி 3ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முவான் விமான நிலையம் ஜனவரி 7ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் எனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
விமான நிலையத்தில் வடிவமைப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளை அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஓடுபாதையின் இறுதிக்கு அருகே தடுப்புச்சுவர் இருந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்படுகிறது.
விமானம் தரையிறங்கி ஓடுபாதையிலிருந்து விலகியவுடன், அச்சுவர் மீது மோதியதில் வெடித்துச் சிதறியது.
இந்நிலையில், தென்கொரியாவின் இடைக்கால அதிபருக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) எழுதிய கடிதத்தில், விமான விபத்து குறித்து தாம் மிகுந்த சோகம் அடைந்துள்ளதாகவும் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.