தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவும் வியட்னாமும் வர்த்தக உறவை வலுப்படுத்த உறுதி

2 mins read
5fe8121d-ec32-4d35-822e-b9749b7b35e6
தென்கொரியாவின் யோங்சானில் உள்ள அதிபர் மாளிகையில் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (இடது), வியட்னாமிய தலைவர் லாமை வரவேற்று அழைத்துச் செல்கிறார். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவும் வியட்னாமும் தங்களுக்கு இடையிலான பொருளியல் உறவு, ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிகூறியுள்ளன.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) இரு நாட்டின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், ஜூன் 4ஆம் தேதி பதவியேற்ற பிறகு தனது முதல் அரசு விருந்தினராக வியட்னாம் தலைவர் டோ லாமை வரவேற்றார்.

இரு தலைவர்களும் தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தகம், முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர் என்று திரு லீயின் அலுவலகம் தெரிவித்தது.

இரு தலைவர்களின் உச்ச மாநாட்டில், அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நாணய மற்றும் நிதிக் கொள்கைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு உறுதியளித்து, குறைந்தது 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அவ்விருநாடுகள் திட்டமிட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்தது.

வியட்னாம் தலைவரின் அரிய வருகை, தென்கொரியாவின் நிறுவனங்கள் வியட்நாமில் திட்டமிடப்பட்டுள்ள முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் வியட்னாமை ஏற்றுமதி நிலையமாகப் பயன்படுத்தி வருகின்றன.

வியட்னாமில் உள்ள குறைந்த தொழிலாளர் செலவுகள், தாராளமான வரி சலுகைகள் மற்றும் 12க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஹனோயின் ஏராளமான வர்த்தக ஒப்பந்தங்களால் தென்கொரியா பல ஆண்டுகளாக பயனடைந்து வருகிறது.

ஆனால், அண்மைய வாரங்களில் ஆசிய நாடுகள்மீது புதிய வரிகளை விதித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கை, எதிர்கால வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.

வியட்னாமிய அதிகாரபூர்வ தரவுகளும் புதிய முதலீடுகளில் மந்தநிலையைக் காட்டுகின்றன.

திரு டோனல்ட் டிரம்ப், தென்கொரியாவின் பொருள்களுக்கு 15 விழுக்காட்டு வரியையும் வியட்னாமிலிருந்து வரும் பொருள்களுக்கு 20 விழுக்காட்டு வரியையும் விதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்