சோல்: தென்கொரியாவில் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் கைப்பேசிகளுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 27) இச்சட்டம் தென்கொரிய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய சட்டத்தின்கீழ் இத்தடை நடப்புக்கு வரும்போது வகுப்புகளில் இருக்கும்போது மாணவர்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது.
இருப்பினும், பாடத்துக்காகக் கைப்பேசிகளைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டாலோ அல்லது அவசரநிலை ஏற்பட்டாலோ பள்ளி அதிகாரிகள் அல்லது ஆசிரியர்களின் அனுமதியுடன் கைப்பேசிகளை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு புதிய பள்ளி ஆண்டு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு (2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி) இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற வாக்வெடுப்பில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்து வாக்களித்தனர். 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர். 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

