வடகொரியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சோல்

வடகொரியாவை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சோல்

2 mins read
8cbce684-f36c-4c05-a8de-99eb3ddd30ba
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) சோலில் நடந்த 107வது மார்ச் 1 சுதந்திர இயக்க தின விழாவில் பேசினார். - படம்: ஏஎஃப்பி

சோல்: வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் மாதம் பதவியேற்றதிலிருந்து வடகொரியாவுடன் உறவுகளை சரிசெய்ய திரு லீ முயன்று வருகிறார்.

“நாங்கள் வடகொரிய அரசியல் அமைப்பை மதிக்கிறோம், எவ்விதமான விரோதச் செயல்களிலும் ஈடுபடவோ, ஒன்றுபடுவதன் மூலம் எந்தவொரு இணைப்பையும் மேற்கொள்ளமாட்டோம் என்பதை எனது நிர்வாகம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறது,” என்று ஜப்பானின் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திர இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில் திரு லீ கூறினார்.

“வடக்குடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளையும் நாங்கள் தொடர்வோம்,” என்றார் அவர்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சோலுடனான அரசதந்திர உறவுக்கான சாத்தியத்தைத் தகர்த்தார், அது, “விகாரமான, ஏமாற்றும் கேலிக்கூத்து, மோசமான செயல்,” என்று விவரித்தார்.

பியோங்யாங்கில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய திரு கிம், “வடகொரியாவுக்கு, தென்கொரியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் நிரந்தர நட்பு நாடு என்ற பிரிவிலிருந்து தென்கொரியா விலக்கப்படும்,” என்றார்.

எனினும், வாஷிங்டன் தனது அணு ஆயுத நிலையை ஒப்புக்கொண்டால் அமெரிக்காவுடன் வடக்கு ஒத்துப்போக முடியும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது சீனப் பயணத்தின்போது திரு கிம்முடன் சந்திப்பு நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்துள்ளன. வடகொரியாவுடனான சந்திப்புக்கு “100 விழுக்காடு” தயாராக இருப்பதாக 2025ல், திரு டிரம்ப் கூறினார். எனினும், டிரம்பின் சீனப் பயணம் திட்டமிட்டமிட நடைபெறுமா என்பது தற்போது கேள்விக்குரியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்