சேஜொங்: தென்கொரியாவில் நடைபெற்ற வருடாந்தர கல்லூரி நுழைவுத் தேர்வில் செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களைப் பயன்படுத்தி ஏமாற்ற முற்பட்ட ஐவர் பிடிபட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு ஆற்றல்கொண்ட மூக்குக் கண்ணாடிகளையும் மற்றொருவர் கம்பிகள் இல்லா காதொலிப்பான்களையும் பயன்படுத்தியதாகத் தென்கொரியக் கல்வியமைச்சு கூறியது.
கல்லூரிக் கல்விமான் திறன் தேர்வில் பங்கேற்றோரிடையே கண்டுபிடிக்கப்பட்ட 98 விதிமீறல்களில் அதுவும் அடங்கும் என்று நாட்டின் துணைக் கல்வியமைச்சர் சோய் இயுன் - ஒக் தெரிவித்தார்.
சோலில் தேர்வெழுதிய ஒருவர் திறன்பேசியைக் கொண்டு வினாத்தாளைப் படம் எடுத்ததற்காகப் பிடிபட்டார். சோலில் ஒருவரும் கியொங்ஜி மாநிலத்தில் ஒருவரும் கழிவறைகளில் திறன்பேசிகளைப் பயன்படுத்தினர்.
தேர்வெழுதியோரில் 44 பேர் திறன்பேசிகளையும் பிற மின்னிலக்கச் சாதனங்களையும் வைத்திருந்ததாகச் சிக்கினர்.
செயற்கை நுண்ணறிவு ஆற்றல்கொண்ட சாதனங்கள் மூலம் தேர்வில் ஏமாற்ற முயல்வோர் குறித்த கவலை அதிகரித்ததை அடுத்து தென்கொரிய அரசாங்கம் சோதனை நடவடிக்கைகளை இவ்வாண்டு கடுமையாக்கியது.
தேசிய வரிக் கணக்காளருக்கான தகுதித் தேர்வில் ஆக அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் தேர்வின்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதை இதற்குமுன் ஒப்புக்கொண்டார்.
தேர்வின்போது சோதனை நடவடிக்கையாக மூன்று அவசர எச்சரிக்கை செய்திகளை அதிகாரிகள் தேர்வெழுதியோரின் கைப்பேசிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காலை 8.30 மணி, பிற்பகல் 2.21 மணி, பிற்பகல் 2.57 மணி ஆகிய வேளைகளில் அதிகாரிகள் அனுப்பிய செய்திகள் மூலம் மொத்தம் 49 பேர் திறன்பேசிகளைப் பயன்படுத்தியது அம்பலமானது.
தேர்வின்போது பிடிபட்ட 98 பேரும் விதிகளை மீறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர் என்று கல்வியமைச்சு சொன்னது.
மேலும், நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தியோர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர் என்று அது எச்சரித்தது.
இவ்வாண்டு டிசம்பர் 11ஆம் தேதிக்குள் கல்வியமைச்சும் கொரியப் பாடத்திட்ட, மதிப்பீட்டுக் கழகமும் மறுஆய்வுக் குழுவின் மூலம் இறுதிக்கட்ட தண்டனைகளைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
