சோல்: அதிபர் பதவியிலிருந்து திரு யூன் சுக் இயோல் நீக்கப்பட்டதை அடுத்து தென்கொரிய மக்கள் பலர் சமூக ஊடகங்களில் வித்தியாசமான கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் ‘வெங்காயத் தாள் நூடல்ஸ்’ கொண்டாட்டம்.
கொரிய மொழியில் ‘பா’ (pa) என்றால் வெங்காயத் தாள், ‘மியென்’ (myeon) என்றால் நூடல்ஸ். இரண்டையும் சேர்த்தால் ‘பாமியென்’ (pamyeon). கொரிய மொழியில் ‘பாமியென்’ என்றால் நீக்கப்படுதல் என்று அர்த்தம்.
நூடல்ஸ் உணவு மீது வெங்காயத் தாள்களைப் போட்டு அதைப் படமெடுத்து மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரு யூன் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பல வாரம் முழுக்கமிட்டவர்கள் தற்போது இந்த ‘பாமியென்’ கொண்டாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, திரு யூன் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அமல்படுத்தினார். பின்னர் அதை மீட்டார்.
அரசாங்கத்துக்கு எதிரான திட்டமிட்ட கிளர்ச்சி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காகத் திரு யூன் அதிபர் பதவியில் இருந்து ஏப்ரல் 4ஆம் தேதி நீக்கப்பட்டார்.