தென்கொரியா: ஒரே நேரத்தில் தலா $1 மில்லியன் பரிசு வென்ற சக ஊழியர்கள்

2 mins read
a87059ae-3c59-446a-b96e-640e754d9db8
தென்கொரியாவின் பியோங்டெங்கில் சக ஊழியர்கள் இருவருக்குத் தலா 1 பில்லியன் வோன் பரிசு கிடைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. - படம்: ஊடகம்

சோல்: தென்கொரியாவின் கியோங்கி மாநிலத்தில் உள்ள பியோங்டெக் என்னும் ஊரில் சக ஊழியர்கள் இருவருக்கு ஒரே நேரத்தில் 1 பில்லியன் வோன் (S$939,000) பரிசு கிடைத்துள்ளது.

வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) ஊழியர் ஒருவர் தான் பரிசு வென்றது பற்றி சக ஊழியரிடம் சொன்னார். உடனே அந்த சக ஊழியரும், தனது நண்பர், எந்தக் கடையில் பரிசுச் சீட்டு வாங்கினாரோ அதே கடையில் இன்னொரு சீட்டை வாங்கி, அந்தச் சீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எண்ணைச் சுரண்டிப் பார்த்ததும் ஆச்சரியம். ஏனெனில், அவருக்கும் 1 பில்லியன் வோன் பரிசு கிடைத்தது.

‘ஸ்பிட்டோ 2000’ என்னும் அந்த லாட்டரிச் சீட்டை வாங்கி, சுரண்டிப் பார்த்து பரிசு விழுந்தது குறித்து உடனடியாக அறிந்துகொள்ளலாம். ஆனால், அந்த லாட்டரிச் சீட்டு வாங்குவோரில் ஐந்து மில்லியன் பேரில் ஒருவருக்குத்தான் 1 பில்லியன் வோன் பரிசு கிடைக்கும். இப்போது அதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்து அச்சான இரண்டு சீட்டுகளுக்கும் தலா ஒரு பில்லியன் வோன் கிடைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டொங்ஹாங் லாட்டரி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதல் வெற்றியாளர் கூறுகையில், “நான் பரிசுச் சீட்டைச் சுரண்டிப் பார்க்கும்போது ஒரு பில்லியன் வோன் பரிசு கிடைத்துள்ளதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக என் அருகே நின்ற சக ஊழியரிடம் சொல்லி, அதே கடையில் அடுத்த சீட்டை வாங்கும்படி துரிதப்படுத்தினேன். அவ்வாறு வாங்கிய அவருக்கும் ஒரு பில்லியன் வோன் பரிசு கிடைத்ததால் எங்கள் இருவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி,” என்றார். மேலும், அந்தப் பணத்தைக் கொண்டு தனது வீட்டுக் கடன் அனைத்தையும் கட்டி முடிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்