சோல்: தென்கொரியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் பல்வேறு விவகாரங்கள் குறித்து அளித்த புகார்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே, கவனக்குறைவாக ஓட்டப்படும் டாக்சிகள், தரமற்ற தங்குவிடுதிகள், கடைகளில் அளவுக்கு அதிகமான விலையில் விற்கப்படும் பொருள்கள் எனப் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன.
ஜனவரி முதல் ஜூலை வரை இத்தகைய 1,753 புகார்கள் அளிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 1,744 புகார்களைக் கொரியச் சுற்றுலா அமைப்பு பெற்றது.
கொரியச் சுற்றுலாத் தரவுகள் பிரிவின் புள்ளிவிவரங்களை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) அமைப்பு வெளியிட்டது.
சுற்றுப்பயணிகளுக்கான புகார் நிலைய இணையத்தளம், 1330 என்ற கொரியச் சுற்றுப்பயண அவசர எண் ஆகியவை மூலம் புகார்கள் அளிக்கப்பட்டன.
கே-பாப் குழுவின் பி.டி.எஸ் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற வட்டாரத்தைச் சுற்றிய தங்குவிடுதிகள், முன்பதிவுகளை ரத்துசெய்வோரிடமிருந்து நியாயமற்ற கட்டணங்களை வசூலிப்பதாகப் பல புகார்கள் மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்டன.
நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியைத் தக்கவைப்பதற்குச் சேவைகளில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைக் களைவதுதான் தீர்வு என்று சுற்றுலாத் துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
கொவிட் பெருந்தொற்றுக் காலகட்டத்தை அடுத்து புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு 288 புகார்கள் அளிக்கப்பட்டன. அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டிலேயே 902ஆக உயர்ந்தது. அதே எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 1,543ஆகவும் கடந்த ஆண்டு 1,744ஆகவும் கூடியது.
வெவ்வேறு வட்டாரங்களை ஒப்புநோக்க சோலில் ஆக அதிகப் புகார்கள் பதிவாகின. இவ்வாண்டு அங்கிருந்து 665 புகார்கள் வந்தன.
தங்குவிடுதிகள் தொடர்பில் ஒட்டுமொத்தமாகப் பெறப்பட்ட புகார்கள் கிட்டத்தட்ட 500. கடைகள் தொடர்பில் பெறப்பட்ட புகார்கள் 376. மோசமான சேவை, விலை தொடர்பான சச்சரவு ஆகியவற்றை எதிர்கொண்டதாகச் சுற்றுப்பயணிகள் கூறினர்.
சீனாவிலிருந்து சென்றவர்களே ஆக அதிகமான புகார்களைப் பதிவுசெய்தனர். சீன நாட்டவர் கிட்டத்தட்ட 680 பேர் இவ்வாறு புகார் அளித்தனர்.
அதையடுத்துத் தென்கொரியர்கள், ஜப்பானியர்கள், தைவானியர்கள் ஆகியோரும் புகார் அளித்தனர்.


