சோல்: பாய்ச்சப்படும் ஏவுகணைகளைத் தடுக்கும் தற்காப்பு ஆயுதத்தை உருவாக்கியிருப்பதாக தென்கொரியா வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 29) தெரிவித்தது.
அண்டை நாடான வடகொரியாவின் அணுவாயுத மிரட்டல்களைக் கையாள அந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவை எதிரி நாடு என வடகொரியா வகைப்படுத்தியிருக்கிறது. இரு நாடுகளும் ஒன்றுசேர வேண்டும் என்ற இலக்கைப் பொறுத்தவரை தென்கொரியா தங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றும் வடகொரியா குறைகூறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த ஏவுகணைத் தடுப்பு ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்எஸ்ஏஎம் (LSAM) எனப்படும் அந்த ஆயுதத்தைக் கொண்டு தங்களை நோக்கி வரும் ஏவுகணைகள், விமானங்களைத் தடுக்க முடியும். பாய்ச்சப்பட்டதும் 40 கிலோமீட்டர் உயரம் வரை சென்றவுடன் சம்பந்தப்பட்ட ஏவுகணைகளையும் விமானங்களையும் புதிய ஆயுதத்தைக் கொண்டு தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள அந்த ஆயுதம், 2020களின் நடுப்பகுதிக்கும் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தென்கொரிய தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. ஒரே நேரத்தில் பல எல்எஸ்ஏம் தற்காப்பு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
“இது, உயரத்தில் செல்லும் எதிரிகளின் ஏவுகணைகளைத் தடுத்து நிலத்துக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்கும் அதிநவீன ஆயுதமாகும். இதன் மூலம் எங்கள் ராணுவத்தால் மேலும் உயரமான பகுதிகளிலும் கூடுதல் விரிவான பகுதிகளிலும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்,” என்றும் தென்கொரியா அந்த அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த ஐந்தாண்டுகளாக வடகொரியா பல வகை ஏவுகணைகளைச் சோதித்திருக்கிறது. தென்கொரியாவைத் தாக்கக்கூடிய குறைவான தூரம் செல்லும் ஏவுகணைகளும் அவற்றில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில், வடகொரியா தன்னிடம் இருக்கும் ஆயுதங்களை அதிகரித்து வந்துள்ளது.
இருநாடுகளும் கடற்பகுதிகளில் துப்பாச்சிச்சூட்டுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் வடகொரியா, தென்கொரியத் தீவு ஒன்றின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியது.
எனினும், வடகொரியா இதுவரை தென்கொரியா மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதில்லை.

