தென்கொரியாவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படலாம்

தென்கொரியாவில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படலாம்

2 mins read
0d785126-14e6-47e2-b709-0bc07fdf2b62
2028ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 110,000 வெளிநாட்டவர்களுக்கு மூத்தோர் பராமரிப்புத் துறையில் வேலை கிடைக்கலாம் என்று தென்கொரிய அரசாங்கத்திற்குத் தொடர்புடைய ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.  - படம்: ஃபிரீபிக்

சோல்: தென்கொரியாவின் மூத்தோர் பராமரிப்புத் துறையில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. அந்த வேலைகளை உள்ளூர் மக்களை மட்டும் கொண்டு நிரப்ப முடியாது எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக 2028ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 110,000 வெளிநாட்டவர்களுக்கு மூத்தோர் பராமரிப்புத் துறையில் வேலை கிடைக்கலாம் என்று தென்கொரிய அரசாங்கத்திற்குத் தொடர்புடைய ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரிய குடிநுழைவுச் சேவை அறக்கட்டளை என்று அழைக்கப்படும் அந்த ஆய்வகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) இதனைத் தெரிவித்தது.

“நாட்டின் நீண்டகாலச் சுகாதாரக் கட்டமைப்பில் வெளிநாட்டுச் சுகாதார ஊழியர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஊழியர் அனுகூலங்களைத் தர வேண்டும். அதேபோல், அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்,” என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேகமாக மூப்படையும் நாடுகள் பட்டியலில் தென்கொரியாவும் உள்ளது. அதன் காரணமாக அந்நாடு தனது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென்கொரிய அரசாங்கத் தரவுகளின்படி 2028ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டில் 800,000 மூத்தோர் பராமரிப்பு ஊழியர்கள் தேவைப்படுவர் என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள ஊழியரணியைக் கொண்டு 690,000 இடங்களை நிரப்பமுடியும். ஆனால், எஞ்சியுள்ள்அ 110,000 காலியிடங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.

மூத்தோர் பராமரிப்புத் துறையிலும் வயதான ஊழியர்கள் பலர் உள்ளது தென்கொரியாவுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுத் தரவுப்படி 657,104 ஊழியர்கள் மூத்தோர் பராமரிப்புத் துறையில் உள்ளனர். அவர்களில் 66 விழுக்காட்டினர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைத் தாண்டியவர்கள். அதேபோல் அதில் 6,644 பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.

உலக அளவில் சுகாதாரப் பராமரிப்புத்துறையில் தென்கொரியா வெளிநாட்டு ஊழியர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்குவதில்லை. அதனால், வெளிநாட்டுச் சுகாதார ஊழியர்கள் தென்கொரியாவைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமானது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்