தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியா: 10,000க்கும் மேற்பட்டோர் மின்னிலக்கப் பாலியல் குற்றங்களால் பாதிப்பு

1 mins read
84a4a864-e367-40bf-91b2-87058a8950da
சமூக ஊடகச் செயலிகள். - படம்: பிக்சாபே

சோல்: தென்கொரியாவில் 2023ல் மின்னிலக்கப் பாலியல் குற்றங்களைக் கையாள 10,000க்கும் அதிகமானோர் அரசாங்கத்திடமிருந்து உதவி நாடினர்.

மின்னிலக்கப் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு நிலையம் 2018ல் அமைக்கப்பட்டதிலிருந்து உதவி நாடியவர்களில் இதுவே ஆக அதிக எண்ணிக்கை.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் பதன்மவயதினரும் 20களில் உள்ளோரும் ஆவர். வன்போலி (deepfake) படங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.

பாலினச் சமத்துவம், குடும்ப அமைச்சு வெளியிட்ட மின்னிலக்கப் பாலியல் குற்ற அறிக்கையின்படி, 2023ல் மொத்தம் 10,305 பேர் ஆதரவு பெற்றனர். அதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததைவிட இது 14.7 விழுக்காடு அதிகம்.

பாதிக்கப்பட்டோரில் பதின்மவயதினர் 27.9 விழுக்காடு பங்கு வகித்தனர். 2022ல் இந்த விகிதம் 17.8 விழுக்காடாக இருந்தது. ஒப்புநோக்க, இருபதுகளில் உள்ளவர்கள் 50.2 விழுக்காடு பங்கு வகித்தனர். முன்னதாக இந்த விகிதம் 18.2 விழுக்காடாக மட்டும் இருந்தது.

பாதிக்கப்பட்ட பதின்மவயதினரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

“பதின்மவயதினர் சமூக ஊடகங்களையும் மின்னிலக்கத் தளங்களையும் அடிக்கடி பயன்படுத்துவதால், அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் அதிகம்,” என அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்