சோல்: முக்கியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் முறைகேடாகச் செயல்படும் மாணவர்களைப் பிடித்துக் கொடுப்போருக்கு 75,000 அமெரிக்க டாலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் நடைபெறும் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியாக இந்நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே ஆக அதிவேக சராசரி இணைய இணைப்பு, மிக அதிகமான செய்றைக் நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, கல்வி ஆர்வம் ஆகியவற்றைக் கொண்ட நாடான தென்கொரியாவில் அண்மையில் பல தேர்வு மோசடிகள் அம்பலமாகியுள்ளன.
கடினமான கணக்கியல் தேர்வில் முதலிடம் பிடித்தவர், ஏஐ, நுண்படக்கருவி ஆகியவற்றின் உதவியுடன் ஏமாற்றி கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றதை ஒப்புக்கொண்டார்.
“உயர்தொழில்நுட்பத் தேர்வுகளில், மோசடிகளைக் காட்டிக்கொடுப்பதை ஊக்குவிக்க, ஒவ்வொரு வழக்கிற்கும் குறைந்தது 100 மில்லியன் வொன் (97,000 வெள்ளி) சன்மானம் வழங்க உத்தரவிட்டுள்ளோம்,” என்று அதிபர் லீ ஜே மியூங் நவம்பர் 17ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
வழக்கில் தொடர்புடையோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும், உடந்தையாக இருந்தவர்களைக் காட்டிக்கொடுப்போருக்குத் தண்டனை குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஏஐ சார்ந்த மோசடியைத் தடுக்க ஒரு நாட்டுத் தலைவர் ரொக்கச் சன்மானம் அறிவிப்பது இதுவே முதல்முறை.
“தேர்வில் ஏமாற்ற நினைப்பவர்கள் தற்செயலான நற்பேற்றை நம்பி எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டாம். ஏமாற்றும் எண்ணத்தைக் கைவிடுவது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையளிக்கும்,” என்றும் அவர் பதிவிட்டார்.
இத்துடன் மேலும் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. தேர்வு நாளன்று நவீனச் சாதனங்களைக் கண்டறியப் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான கண்காணிப்பாளர்கள் தேர்வு நிலையங்களில் பணியமர்த்தப்படுவர். கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஒப்படைக்கப்படாத கைப்பேசிகளைக் கண்டறிய நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை அனுப்பப்படும்.
கிராஃபைட் பென்சில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மூக்குக்கண்ணாடிகள் சோதனையிடப்படும். நுண்படக்கருவிகளை மறைக்கக்கூடிய நகைகள், தொப்பிகள், பொத்தான் சட்டைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆடைப் பொத்தான்கள் ஒட்டுவில்லைகளால் மூடப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டுப் பிடிபடுவோருக்குப் பத்தாண்டுகள் தடை விதிக்கவும், முறையான புகார்கள் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் பிரதமர் ஹான் சியோங் சூக் தெரிவித்தார்.
