தென்கொரியாவில் மீண்டும் மூண்ட காட்டுத்தீ; அணைக்கப் போராடும் அதிகாரிகள்

தென்கொரியாவில் மீண்டும் மூண்ட காட்டுத்தீ; அணைக்கப் போராடும் அதிகாரிகள்

1 mins read
6bf1599d-bd6c-4ba1-994d-65c11e190c8f
தென்கொரியாவில் இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து கடுமையாக எரியும் காட்டுத்தீ மீண்டும் மூண்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க அதிகாரிகள் போராடிவருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் கட்டுக்குள் வந்த காட்டுத்தீ ஒருசில நகரங்களில் மீண்டும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியதை அடுத்து (மார்ச் 29) ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க அதிகாரிகள் முற்பட்டுள்ளனர்.

வறண்ட சூழலும் பலத்த காற்றும் பல இடங்களில் மூண்ட தீயை ஊதி பெரிதாக்கியதில் தென் கிழக்குப் பகுதியில் 29 பேர் மாண்டனர்; பலருக்குக் காயம் ஏற்பட்டது.

ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வட கியொங்சொங் மாநிலத்தில் உள்ள அன்டொங் நகரில் மீண்டும் சனிக்கிழமை (மார்ச் 29) காலை காட்டுத்தீ மூண்டதில் 8 ஹெலிகாப்டர்களை அதிகாரிகள் அனுப்பினர்.

கட்டுப்படுத்தப்பட்ட தீயிலிருந்து எழுந்த பொறியால் மீண்டும் காட்டுத்தீ பெரிதாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அன்டொங் பகுதிக்கு இன்னும் கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாதம் 22ஆம் தேதி அன்டொங்கில் மூண்ட காட்டுத்தீ பல நாள்கள் எரிந்தது. அதில் 2,900 வீடுகள் சாம்பலாகின. இதுவரை 35,000 ஹெக்டர் நிலப்பரப்பு தீயில் கருகிவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

காட்டுத்தீக்கு கௌன்சா ஆலயம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உள்ள அரிய பொருள்களும் இரையாயின. கௌன்சா ஆலயம் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

தென்கொரியா இதுவரை காணாத காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடிவருகிறது.

குறிப்புச் சொற்கள்