தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் விலகல்: அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார்

2 mins read
0bc356b2-8577-402a-9e5c-7567b460d94e
லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) சோல் மத்திய வட்டார நீதிமன்றத்திற்கு வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-முயுங் - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-முயுங் தாம் பதவி விலகிவிட்டதாக புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை அவர் துறந்துள்ளார்.

வேட்பாளராகக் களமிறங்குவது குறித்து அவர் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆளும் மக்கள் சக்திக் கட்சி சார்பில் தற்போதைய தொழிலாளர் அமைச்சர் கிம் மூன்-சூ அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

தென்கொரிய அதிபர் தேர்தல் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டதால் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள திரு லீ, “இப்போது புதிய பணியைத் தொடங்கி உள்ளேன்,” என்று யூடியூப் ஊடகத்தில் நடத்தப்பட்ட கட்சித் தலைமைத்துவக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

61 வயதாகும் திரு லீ, 2022 அதிபர் தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டவர்.

இருப்பினும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மகத்தான வெற்றி பெற்றது.

எதிர்க்கட்சித் தரப்பில் அவர் ஒருவரே வலுவான அதிபர் தேர்தல் வேட்பாளர் என்று கருதப்படுகிறது.

அதேநேரம், ஆளும் கட்சியில் தற்போதைய சோல் நகர மேயர் உட்பட பலர் உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.

நீக்கப்பட்ட அதிபர் யூனை ஆதரித்து வந்த தொழிலாளர் அமைச்சர் கிம் மூன்-சூவுக்கு கட்சியில் செல்வாக்கு உண்டு என்றபோதிலும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் திரு லீயிடம் பின்தங்கி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்