தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர்

2 mins read
72bb05d2-0c18-47f4-90c1-7a53355d503b
சோல் உயர் நீதிமன்றம் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே மியுங் மீதான குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தது. - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங் நிரபராதி என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியதாகத் திரு லீமீது சோலின் மத்திய வட்டார நீதிமன்றம் சுமத்திய குற்றச்சாட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் திருத்தி எழுதியது.

அது அதிபருக்கான போட்டியில் திரு லீ தாராளமாக களமிறங்குவதற்கான வழியை அமைத்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பேசிய திரு லீ, உயர் நீதிமன்றம் தம்மைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது அரசியல் நோக்கமுடையது என நிரூபனமாகியுள்ளது என்றார்.

அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது சியொங்னாம் வட்டாரத்தில் உள்ள நில மேம்பாட்டுத் திட்டம் குறித்து 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற தணிக்கையில் தவறான தகவல்களைத் தந்ததாகக் கூறப்பட்டது.

அதையடுத்து தேர்தல் சட்டத்தை மீறியதாகச் சோல் மத்திய வட்டார நீதிமன்றம் சென்ற ஆண்டு திரு லீமீது குற்றஞ்சாட்டியது. அதோடு திரு லீக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அது நிறைவேறியிருந்தால் அடுத்த அதிபர் தேர்தலில் திரு லீ போட்டியிடுவது தடைப்பட்டிருக்கும்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல்மீதான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையை அரசமைப்பு நீதிமன்றம் தொடர்ந்தால் அடுத்த 60 நாள்களில் தென்கொரியா திடீர் தேர்தலை நடத்தவேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியானவர் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர் சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்கிறார்.

தென்கொரியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகளுக்குத் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்கப்படுவதோடு நாடாளுமன்ற பதவியும் பறிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்