சோல்: தென்கொரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று இருக்கும் பிரதமர் ஹான் டுக் சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்று அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமை வரை அதிபர் பதவியில் இருந்த யூன் சுக் இயோல் இம்மாதத் தொடக்கத்தில், டிசம்பர் 3ஆம் தேதி ராணுவ ஆட்சிக்கான சட்டத்தை திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு அரசியல் நெருக்கடி தொடங்கியது.
அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. அதன் மீது டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
இருப்பினும், மீண்டும் ஒரு பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்தன. அதன் மீது கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14) வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதன் விளைவாக, 300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 204 பேரின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அதிபர் யூன் இடைநீக்கம் செய்யப்பட்டு, இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும், ராணுவ ஆட்சிக்கான சட்டத்தைக் கொண்டு வந்ததில் திரு ஹானும் காவல்துறையின் விசாரணையில் உள்ளார். அதனால், அவரது இடைக்கால அதிபர் மற்றும் பிரதமர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில், திரு ஹானுக்கு எதிராகப் பதவிநீக்கத் தீர்மானத்தைக் கோரப்போவதில்லை என ஜனநாயகக் கட்சி முடிவெடுத்து இருப்பதாக அதன் தலைவர் லீ ஜே மியுங் தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, “இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றதும் திரு ஹானுடன் பேசினேன். அரசியல் கட்சிகளின் பக்கம் சாயாமல் நடுநிலைமையுடன் தொடர்ந்து இருக்குமாறு அவரிடன் கேட்டுக்கொண்டேன்,” என்றார்.
நாட்டின் கொள்கைகளையும் வரவுசெலவுத் திட்டத்தையும் விவாதிக்க நாடாளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் ஈடுபடுத்தும் வகையில் இருதரப்புக் குழு ஒன்றை ஏற்படுத்த அவர் யோசனை தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவிக்கவிடாமல் அதிபர் யூனைப் பிரதமர் பொறுப்பில் இருந்த ஹான் தடுக்காததால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனநாயகக் கட்சி காவல்துறையிடம் புகார் பதிவு செய்து இருந்தது.
நாட்டின் ஒற்றுமையைக் காக்க உறுதி
இதற்கிடையே, நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும் நிதிச் சந்தைகளின் பதற்றத்தைத் தணிக்கவும் இடைக்கால அதிபர் ஹான் டுக் சூ உறுதி தெரிவித்து உள்ளார்.
“வெளிநாட்டுக் கொள்கைகளையும் பாதுகாப்புக் கொள்கைகளையும் இடையூறு எதுவுமின்றி தென்கொரியா கடைப்பிடிக்கும்.
“தென்கொரிய-அமெரிக்க உறவு தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடிக்கப்படும்,” என்று திரு ஹான் தெரிவித்து உள்ளதாக இடைக்கால அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை திரு ஹான் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக தென்கொரியாவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் தெரிவித்தன.

