விமானப் பாதுகாப்பு பற்றி விசாரணை நடத்த தென்கொரிய அரசாங்கம் உத்தரவு

3 mins read
0f69369b-3840-4a50-9f85-b2f965a5ca1d
விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் ஆய்வு நடத்தினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

சோல்: நாட்டின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நடைமுறை பற்றி அவசர பாதுகாப்புச் சோதனை மூலம் விசாரணை நடத்த தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் உத்தரவிட்டு உள்ளார்.

தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நிகழ்ந்த ஆக மோசமான விமான விபத்தைத் தொடர்ந்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து ஜெஜு ஏர் (Jeju Air Boeing 737-800) விமானம் தென்கொரியாவின் தென்பகுதியிலுள்ள மூவான் அனைத்துலக விமான நிலையத்தில் டிசம்பர் 29 காலை 9 மணியளவில் தரை இறங்கியபோது ஓடுபாதை முடிவில் திடீரென்று சறுக்கி, விமான நிலைய சுவர் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.

அதனைத் தொடர்ந்து கிளம்பிய பெரிய தீப்பந்து அந்த விமானத்தைச் சூழ்ந்தது. கட்டுப்படுத்த இயலாத அளவுக்குப் விமானம் முழுவதும் பரவிய தீயில் சிக்கி 175 பயணிகளும் நான்கு விமான ஊழியர்களும் உயிரிழந்தனர். இரு ஊழியர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

அந்த சோக நிகழ்வு குறித்து ஆராய திங்கட்கிழமை சோலில் நடைபெற்ற பேரிடர் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இடைக்கால அதிபர் சோய் கலந்துகொண்டு பேசினார்.

“விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது, அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வது, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பது ஆகியன தற்போது நம் முன் உள்ள தலையாயப் பணிகள்,” என்று அவர் தெரிவித்தார்.

“விபத்து தொடர்பான விசாரணை முடிவுகள் வெளிவராத நிலையில், விசாரணை நடைமுறை குறித்து வெளிப்படையாகத் தெரிவுக்குமாறும் சோகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதுகுறித்து விளக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

“விபத்து மீட்புப் பணிகள் முழுமையுற்றதும், இதுபோன்ற மோசமான விபத்து மீண்டும் நடக்காதிருப்பதை உறுதி செய்யும் வகையில், நாட்டின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நடைமுறை மீதும் அவசர பாதுகாப்புச் சோதனை நடத்த போக்குவரத்து அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்று திரு சோய் தமது உரையில் குறிப்பிட்டார்.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, தென்கொரிய விமான நிறுவனங்களிடம் உள்ள எல்லா 101 ‘போயிங் 737-800’ ரக விமானங்களிலும் சிறப்புச் சோதனை நடத்தலாமா என போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது.

மற்றொரு புறம், விமான விபத்து நிகழ்ந்ததற்குக் காரணம் பறவை மோதல் சம்பவமா அல்லது வானிலை நிலவரமா என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

இவை மட்டுமல்லாது மேலும் சில கேள்விகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த விமானத்தில், மிகவும் வேகமாக இயங்கக்கூடிய ‘CFM 56-7B26’ ரக என்ஜின்கள் இரண்டு பொருத்தப்பட்டது ஏன்; ஓடுபாதையில் சறுக்கி சுவரை நோக்கி விமானம் ஓடியபோது தரையிறக்க விசை (landing gear) இயக்கப்படாதது ஏன் ஆகியனவும் சந்தேகமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நிகழ்வதற்கு முன் நடந்தவற்றை போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (டிசம்பர் 30) விளக்கியது.

“விமானம் திட்டமிட்டபடி விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டு இருந்தது. அப்போது அது பறந்துகொண்டு இருந்த வட்டாரத்தில் பறவைகள் தென்படுவதாக விமானிகளிடம் விமான நிலையக் கட்டுப்பாட்டு அலுவலகம் கூறியது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்றால் விமானம் தாக்கப்பட்டதாக கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் விமானிகள் கூறினர்.

“தொடர்ந்து, ஆபத்து எச்சரிக்கை விடுத்த விமானிகள், உடடினயாகத் தரையிறங்காமல் வானில் சிறிது நேரம் சுற்றிவிட்டு மீண்டும் முயற்சிப்பதாக சமிக்ஞை தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே விமானம் தரையிறங்கியது. 2,800 மீட்டர் தூர ஓடுபாதையின் 1,200 மீட்டரில்தான் அது தரையைத் தொட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடுபாதை முடிவில் அது சறுக்கியது,” என அமைச்சு தனது விளக்கத்தில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்