சோல்: தென்கொரியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளை அடையாளம் காண்பதற்கான கண்காணிப்பு கேமராக்களையும் ரேடார் கருவிகளையும் பொருத்தவேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) உத்தரவிட்டுள்ளனர்.
அண்மையில் 179 பேரைப் பலிவாங்கிய ஜேஜு ஏர் விமான விபத்து நேர்ந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த போயிங் 737-800 வகை விமானம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதியன்று தாய்லாந்திலிருந்து தென்கொரியாவின் முவானுக்குப் பயணம் மேற்கொண்டது. முவான் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக்கொண்டது.
சுவர் ஒன்றின் மீது மோதி அது தீப்பிடித்துக்கொண்டது. அவ்விபத்து, தென்கொரியாவில் நேர்ந்துள்ள ஆக மோசமான விமானத்துறை விபத்தாகும்.
முதலில் தரையிறங்க முயற்சி செய்து அதிலிருந்து பின்வாங்கிய பிறகு அந்த விமானம் பறவையுடன் மோதியதாக அதன் விமானி எச்சரித்தார். இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சி செய்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
விசாரணையில் அந்த விமானத்தின் இரு ‘எஞ்சின்’ இயந்திரங்களிலும் பறவை இறகுகள் இருந்தது கண்டறியப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்தன. பறவையுடன் மோதியது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“எல்லா விமான நிலையங்களிலும் குறைந்தது ஒரு ‘தர்மல் இமேஜிங்’ (thermal imaging) கேமராவையாவது பொருத்தவேண்டும்,” என்று தென்கொரிய சட்ட அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 2026ஆம் ஆண்டில் அவற்றைப் பொருத்தும் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
“தொலைதூரத்தில் இருக்கும் பறவைகளை அடையாளம் கண்டு பதில் நடவடிக்கை எடுப்பதன் தொடர்பில் விமானங்களின் ஆற்றலை மேம்படுத்த பறவைகளை அடையாளம் காணும் ரேடார் கருவிகள் எல்லா விமான நிலையங்களிலும் பொருத்தப்படும்,” என்றும் தென்கொரிய நில அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பறவையின் உடல் பரப்பளவு, அது செல்லும் பாதைகள் ஆகிய தகவல்களை ரேடார் கருவி கண்டறியும். அத்தகவல்கள், ஆகாயப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கையாளும் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்படும்.
அந்த அதிகாரிகள் பின்னர் தகவல்களை விமானியிடம் தெரிவிப்பர்.