சோல்: தென்கொரிய அரசாங்கம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களைப் பணிக்குத் திரும்பும்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளது.
மாதக்கணக்கில் நீடிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மருத்துவப் பேராசிரியர்களும் இணைந்துகொண்டுள்ள நிலையில் அரசாங்கம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டிலுள்ள 36,000 தனியார் மருந்தகங்களில் கிட்டத்தட்ட நான்கு விழுக்காட்டு மருந்தகங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை மூடத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத்திடம் தெரிவித்தன என்று சுகாதார அமைச்சர் சோ கியூ-ஹோங் கூறினார்.
மருத்துவச் சேவையில் ஏற்படும் தொய்வைக் குறைக்கும் வண்ணம், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, மருத்துவர்கள் பணிக்குத் திரும்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களுக்கு இத்தகைய உத்தரவை அரசாங்கம் பிறப்பித்திருந்தது. பின்னர் சமாதான முயற்சியாக, இம்மாதத் தொடக்கத்தில் அதை மீட்டுக்கொண்டது.
தென்கொரியச் சட்டத்தின்கீழ், பணிக்குத் திரும்பப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் மருத்துவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். இதர சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
மருத்துவர்களின் போராட்டம் ‘வருத்தத்திற்குரியது’ என்று கூறிய அதிபர் யூன் சுக் இயோல், இத்தகைய போராட்டம் ஏமாற்றமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“நோயாளிகளைப் புறக்கணிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கடுமையாகக் கையாள்வதைத் தவிர (அரசாங்கத்திற்கு) வேறு வழியில்லை,” என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவர்கள் பணிக்குத் திரும்பினால் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
சென்ற வாரம் உள்ளூர்க் கருத்துக் கணிப்பு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்தாய்வில், கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுத் தென்கொரியர்கள் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

