சோல்: தென் கொரியா 2045ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கத் திட்டமிட்டுள்ளது.
அதுவரை விண்வெளி ஆய்வில் 100 டிரில்லியன் வொன் (S$98 பில்லியன்) செலவிடவும் எண்ணம் உள்ளதாக அதிபர் யூன் சுக் யோல் அந்நாட்டின் முதல் விண்வெளி அமைப்பின் தொடக்க விழாவில் கூறினார்.
கொரிய வான்வெளி நிர்வாகம் அந்நாட்டின் விண்வெளிப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்றார் திரு யூன்.
தென் கொரியாவை உலகின் முதல் ஐந்து விண்வெளி வல்லரசுகள் பட்டியலுக்குக் கொண்டுசெல்ல நூற்றுக்கணக்கான வர்த்தகங்களும் தொழில்நிறுவனங்களும் செயல்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்வெளிக்குப் பாய்ச்சப்படும் வாகனத்தையும் துணைக்கோள மேம்பாட்டுத் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும் ஏழாவது நாடாகத் தென் கொரியா உள்ளது. அது 2023ஆம் ஆண்டில் ‘நூரி’ உந்துகணையை வெற்றிகரமாகப் பாய்ச்சியது.
தென்கொரியா 2027ஆம் ஆண்டுக்குள் குறைந்தது மேலும் மூன்று உந்துகணைகளையும், ராணுவத் துணைக்கோளங்களையும் விண்வெளிக்குள் பாய்ச்சத் திட்டமிடுகிறது.

