தென்கொரிய இடைக்கால அதிபரிடம் காவல்துறை விசாரணை

1 mins read
ebdae42a-349b-45b7-99ac-7cf276a62f31
தென்கொரியப் பிரதமரும் இடைக்கால அதிபருமான ஹான் டுக் சூ. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியக் காவல்துறையினர், அந்நாட்டின் பிரதமரும் இடைக்கால அதிபருமான ஹான் டுக் சூவை விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஹானின் அலுவலக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) இத்தகவலை வெளியிட்டார். தென்கொரியாவில் சிறிது நேரம் மட்டுமே அமல்படுத்தப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ராணுவ ஆட்சி சட்டம் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாகக் காவல்துறையினர் திரு ஹானை விசாரித்தனர்.

இம்மாதம் மூன்றாம் தேதியன்று, தற்போது இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். அதிர்ச்சியை ஏற்படுத்திய அம்முடிவுக்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற 12 பேரில் திரு ஹானும் ஒருவர்.

இந்த விவகாரத்தின் தொடர்பில் விசாரணை நடத்தும் சிறப்புக் காவல்துறைப் பிரிவு, அந்த 12 பேரில் ஒன்பது பேரை விசாரித்திருப்பதாக தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவது குறித்து முடிவெடுக்க இம்மாதம் 14ஆம் தேதியன்று நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்தது. அதில் தோல்வியடைந்த பிறகு திரு யூன் இடைக்காலப் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

அதனையடுத்து பிரதமர் ஹான், இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.

திரு ஹானைக் காவல்துறை எப்போது விசாரித்தது என்பதை அவரின் அலுவலக அதிகாரி தெரிவிக்கவில்லை. எனினும், இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு திரு ஹான் விசாரிக்கப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்