தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்ததற்கு மன்னிப்புக் கோரினார் தென்கொரிய அதிபர்

2 mins read
e6647abf-1bed-4327-9f96-1e48bdf95834
தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள அதிபர் அலுவலகத்தில் சனிக்கிழமை உரையாற்றிய பிறகு, அதிபர் யூன் சுக் யோல் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கிறார். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் ராணுவ ஆட்சிச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதற்காக அதிபர் யூன் சுக் யோல் சனிக்கிழமை (டிசம்பர் 7) காலை மன்னிப்புக் கோரினார்.

தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், ராணுவ ஆட்சிச் சட்டம் மீண்டும் அறிவிக்கப்படாது என உறுதியளித்தார்.

தம் முடிவுக்கு சட்டபூர்வ, அரசியல் பொறுப்பை தாம் தவிர்க்கப் போவதில்லை எனச் சொன்ன அவர், அது மிகவும் இக்கட்டான நிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்றார்.

அறிவித்த ஆறு மணி நேரத்தில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை ராணுவ ஆட்சிச் சட்டத்தை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, திரு யூன் ஆற்றிய முதல் உரை இது.

எதிர்காலத்தில் தமது பதவி குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை தம் கட்சியிடம் விட்டுவிடுவதாக அவர் சொன்னார்.

“மிகுந்த மனவேதனைக்கு ஆளான குடிமக்களிடம் நான் மனமாற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் என் பதவிக்காலம் உட்பட அரசியல் நிலவரத்தை நிலைப்படுத்தும் பொறுப்பை என் கட்சியிடம் விட்டுவிடுகிறேன்,” என்றார் திரு யூன்.

திரு யூனின் உரைக்குப் பிறகு பேசிய தென்கொரியாவின் ஆளுங்கட்சித் தலைவர் ஹான் டோங் ஹூன், அரசியல் கடமையை ஏற்று நடத்தும் பொறுப்பில் திரு யூன் இல்லை என்றும் அவரது பதவி விலகலை இப்போது தவிர்க்க முடியாது என்றும் கூறினார்.

திரு யூனின் உரை தமக்கு ஏமாற்றம் தருவதாக தென்கொரியாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியூங் கருத்துரைத்தார்.

“அதிபர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலகுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை,” என்றார் திரு லீ.

அதிபர் யூனால் நாட்டுக்கு ஆபத்து என்றும் அதிகாரத்திலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) திரு ஹான் கூறியிருந்தார்.

திரு ஹான், சனிக்கிழமை (டிசம்பர் 7) பிரதமர் ஹான் டக் சூவைச் சந்திக்கவிருந்ததாக யோன்ஹாப் நியூஸ் நிறுவனம் தெரிவித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் பதவியிலிருந்து திரு யூன் விலகினாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, தென்கொரியாவின் இடைக்கால அதிபராக பிரதமர் நியமிக்கப்படுவார்.

குறிப்புச் சொற்கள்