தென்கொரிய அதிபர் மீதான கண்டனத் தீர்மானம் தோல்வி

2 mins read
7da96603-ff46-4756-983b-4d0c4228d248
தலைநகர் சோலில் சனிக்கிழமை (டிசம்பர் 7) நாடாளுமன்றத்தில் அதிபர் யூன் சுக் இயோல் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் வாக்களிப்பின்போது அவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கண்டனத் தீர்மானம் சனிக்கிழமை (டிசம்பர் 7) தோல்வியுற்றது. அதனால் அவரைப் பதவி விலகச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிபெறவில்லை.

பேரளவில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோதிலும், அதிபர் யூனின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளியேறினர்.

அதிபர் யூனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வாக்களிப்பு அதிகாரபூர்வமாக நிறைவுற்றதாக நாடாளுமன்ற நாயகர் வூ வோன் ஷிக் சனிக்கிழமை இரவு அறிவித்தார்.

அதிபர் யூனின் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் புறக்கணிப்பால் வாக்களிப்பு நடைபெறாதது “மிகுந்த வருத்தமளிப்பதாக” அவர் கூறினார்.

“மொத்தம் 195 வாக்குகள் பெறப்பட்ட நிலையில், மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை இது பூர்த்திசெய்யவில்லை. எனவே, இந்த விவகாரம் மீதான வாக்களிப்பு செல்லுபடியாகாது என்பதை நான் அறிவிக்கிறேன்,” என்றார் திரு வூ.

இந்நிலையில், தாங்கள் வெற்றிபெறும் வரை, அதிபர் மீதான கண்டனத் தீர்மானத்தை தாங்கள் மீண்டும் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியினர் சூளுரைத்துள்ளனர்.

திரு யூன், டிசம்பர் 3ஆம் தேதி இரவு மக்களாட்சியைத் தற்காலிகமாக ரத்து செய்து நாட்டையும் அனைத்துலகச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு யூனின் ஆணையை ரத்து செய்த பின்னர் அவர் ராணுவ ஆட்சிச் சட்டத்தை ஆறு மணி நேரத்திற்குள் மீட்டுக்கொண்டார்.

மொத்தம் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 192 இடங்களைக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், அதிபர் யூன் மீதான கண்டனத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தனர். தீர்மானம் நிறைவேற 200 வாக்குகள் தேவை.

ஆனால், அதிபர் யூனின் மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 108 உறுப்பினர்களும் வாக்களிப்பு தொடங்குவதற்கு முன் அவையிலிருந்து வெளியேறினர். இதனால் எதிர்க்கட்சியினர் அவர்களை விமர்சிக்கும் விதமாகக் கூச்சலிட்டனர்.

அதிபர் யூனின் கட்சியைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கெடுத்தனர்.

ஆனால், முடிவை அறிவிப்பதை தாமதித்த நாடாளுமன்ற நாயகர் வூ வோன் ஷிக், மக்கள் சக்திக் கட்சி உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பி “கொரியக் குடியரசையும் அதன் ஜனநாயகத்தையும் பாதுகாக்குமாறு” அறைகூவல் விடுத்தார்.

வாக்களிப்பின் முடிவு ஆர்ப்பாட்டக்காரர்களைச் சினமடையச் செய்தது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே கிட்டத்தட்ட 150,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதாக காவல்துறை தெரிவித்தது. ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன்.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறியபோது ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் விரக்தியில் அழுது கூக்குரலிட்டனர். சிலர் வீடு திரும்பினர்.

நகர் எங்கிலும், அதிபர் யூனின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் சோலின் பிரதான சதுக்கத்தில் பேரணியாகத் திரண்டனர்.

வாக்களிப்பு தொடங்குவதற்கு முன், மூன்று நாள்களில் முதன்முறையாக பேசிய திரு யூன், 63, ராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், பதவியிலிருந்து விலகாத அவர், தம் எதிர்காலத்தை முடிவெடுக்கும் பொறுப்பை தம் கட்சியினரிடம் விட்டுவிடுவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்